உன்னை ஒன்று கேட்பேன்

0060-0502-1819-3121.jpg 

 என்ன இது வித்தியாசமான தலைப்பு என்று எண்ணுகிறீர்களா? என் மனதில் ஒவ்வொரு நாளும் ஓடும் நினனவலைகளில் ஒன்றை மட்டும் சுருக்கமாக ஒரு பக்கத்தில் மட்டும் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

________________________________________________________________________________________

சந்தர்ப்பவாதிகள் 

சந்தர்ப்பவாதிகள் என்று சிலருக்கு முத்திரை குத்தப்படுகிறது. யார் இந்தச் சந்தர்ப்பவாதிகள். நாம் சந்தர்ப்பவாதிகள் இல்லையா? ஏன் ? எமது செய்கைகளுக்கு மனட்சாட்சியின் மூலம் நியாயம் என்னும் மூலத்தை பூசிக்கொள்வதன் மூலம், சந்தர்ப்பவாதிகள் என்னும் முகமூடியை அகற்றி விடுகிறோமா?

இந்தக் கேள்விகள் எந்தன் இதயத்தில் இன்று ஏனோ முன்னனியில் நீச்சலடிக்கின்றன. சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் அனைவருமே சந்தர்ப்பவாதிகள் தான். அப்படியாயின் நாமனைவரும் சந்தர்ப்பவாதிகளே.

எங்கே சந்தர்ப்பவாதிகள் எனப்படுவோர் வேறுபடுத்தப்படுகிறார்கள் ? சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்குவதற்காக ஒருவனை உபயோகப்படுத்தி விட்டு, பின்பு மற்றொரு சந்தர்ப்பத்திற்காக உதவியவனையே கைகழுவி விடுபவர்கள் தனியான சந்தர்ப்பவாதிகள்.

எதையுமே மனட்சாட்சி என்னும் தராசில் எடைபோடக்கூடிய எவருமே சந்தர்ப்பவாதத்திற்குத் துணை போகமாட்டார்கள்

அன்புடன்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        சக்தி                                                                                                                                                                                               

25.03.2008      

_______________________________________________________________________________________

மன்னிக்க வேண்டுகிறேன்

தெரிந்து ஒரு தப்பையோ, அல்லது தெரியயமல் ஒரு தவறையோ புரிந்து விடுகிறோம். அதன் விளைவு பாரதூரமாக இல்லாதவரை ” மன்னிப்பு ” என்று ஒரு சொல்லால் புண்பட்ட மனதைப் பண்படுத்தக்கூடிய ஆற்றல் நம் அனனவரிடத்திலும் இருக்கிறது.

ஆனால் ஏனோ எல்லோராலும் இதை உளச்சுத்தியோடு பயன்படுத்த முடிவதில்லை. காரணம்            ” மன்னிப்பு ” என்னும் அந்த ஒரு சொல்லை ” நான் ” என்னும் சொல் மறைத்து நிற்கிறது. மன்னிப்புக் கேட்க வேண்டிய மனிதர், மன்னிப்புக் கேட்கவேண்டியவரின் உள்ளத்தில் எந்த அந்தஸ்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதிலேயே பெரும்பாலும் அவரது முடிவு தங்கியிருக்கும்.

தவறு அன்றித் தப்பு தம்பக்கம் இருந்தால் அது இழைக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் மன்னிப்புக் கேட்பதில் எந்தவிதமான கெளரவக் குறைச்சலும் இல்லை என்பதை நம்மில் பெரும்பான்மையோர் உணரத் தவறி விடுகிறோம். ஒருவர் மீது ஆத்திர உணர்ச்சியினால் பாய்வதில் உள்ள அவசரம், தான் கொண்டிருந்தது தவறான அபிப்பிராயம் என்று தெரிந்ததும் அவரிடம் மன்னிப்புக் கேட்பதில் இருப்பதில்லை.

எமது செயல்களுக்கு ஏதாவது ஒரு காரணம் என்னும் சாயத்தைப் பூசி எமது மனட்சாட்சிக்கு மறைத்துவிடும் வல்லமை பெற்றவர்களாகப் பலர் காணப்படுகிறோம்.

” மன்னிப்பை ” மனதாரப் புரிந்து கொண்டு அது கொடுக்கும் மானசீக அமைதியை அனுபவிக்கப் பழகிவிட்டால் அதைப்பிரயோகிப்பது இலகுவாகி விடும்.

அன்புடன்                                                                                                                                                                                                         சக்தி

26.03.2008

_______________________________________________________________________________________

சொல்லத் தெரியாத உணர்வுகள்

சொல்லத் தெரியாமல் சில உணர்வுகள் உள்ளத்தின் மத்தியில் சில சமயங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கும். அது எதனால் ஆரம்பிக்கின்றது என்பது தெரியாமல் உள்ளத்தினுள் புகுந்து விடும்.

இதேபோன்ற உணர்வுகல் இன்று என் மனதில் திடீரென முன்னனிக்கு வந்தன. விடையளிக்க முடியாத பல வினாக்களை உள்ளத்து முன்றலில் அள்ளி வீசுகின்றன.

விடைதேடி குழப்பமென்னும் குட்டையினுள் மூழ்கி, மூழ்கி எழுகின்றது நெஞ்சம்.  ஆனாலும் ஆழத்திலிருந்து ஒரு அசரீரி மன அழுத்தங்களைத் தாங்கிப் பிடிக்கத்தான் செய்கிறது.

உலகத்தின் பல நிகழ்வுகளால் நெஞ்சில் ஏற்பட்ட தாக்கமா? இல்லையெனில் இனம்புரியா எதோ ஒரு அடிமனதின் மறைவிலிருந்து தாக்கும் குற்ற உணர்வின் விளவா ?

ஆனால் ஏதோ ஒர்உ சக்தி எழுத்தக் கொடுக்கும் உந்துசக்தி எழுத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கிறது.

அன்பின்                                                                                                                                                                                                  சக்தி

27.3.2008

_______________________________________________

கற்றது கைம்மண்ணளவு

உண்மையான உலகத்தின் வடிவம் ஏன் உள்ளத்தை வருத்துகிறது ? உண்மை கசக்கும் என்பார்களே அதனால் தானா? புரியவில்லை புலத்தின் கோலங்கள். புலரும் பொழுதுகள்  ஒவ்வொன்றும் புரியவைக்கும் பாடங்கள் உயிரைப் புதிதாய்ப் புனருத்தாரணம் செய்ய வைக்கிறது.

நெஞ்சத்தில் தெரிகின்ற உண்மைக்கு வார்த்தையில் வடிவம் கொடுக்கும் போது அது கேட்பவருக்கு கஷாயம் போலக் கசக்கிறதே !

காலமெல்லாம் ஓடி, ஓடி கற்க வேண்டிய கசப்பான உண்மைகளளக் கற்று விட்டேன் என்றொரு ஆறுதலுடன் உட்காரும் போது, உட்கார்ந்த இடத்தில் முட்களளப் புதைத்து வைக்கும் உறவுகளின் உண்மையான வடிவம் உள்ளத்தைப் புண்ணாக்குகிறது.

ஓ கற்றது கைம்மண்ணளவு தானோ ? இப்போது புரிகிறது ஒளவையின் கூற்றின் உண்மைத் தத்துவம். ஆம் “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது கடலளவு ” அந்த அறிவின் மூதாட்டி குறிப்பிட்டது வாழ்க்கையின் அனுபவம் என்னும் கல்வியை, பள்ளியில் படிக்கும் கல்வியை அல்ல.

அன்புடன்                                                                                                  சக்தி

28.03.2008

________________________________________________

எண்ணங்களின் சுமை

இதயம் கனக்கிறது என்று சொல்வார்களே ! பலகாலம் இதன் உண்மையான அர்த்தம் எனக்குப் புரியாமலிருந்தது. ஆயிரம் வழிகளில், ஆயிரம் வகைகலில் வாழ்க்கையில் இன்பம் விளைந்திட ஏங்குகிறோம். ஆனால் மனதை வருத்தும் நிகழ்வுகள் கொடுக்கும் சுமைகளை இந்த இன்பமான நிகழ்வுகள் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் இலகுவாக்கி விடுவதில்லை.

ந்ல்லது செய்கிறோம், நல்லவனாக வாழ்கிறோம் என்று மனட்சாட்சிக்குப் பயந்து வாழ்பவன் வாழ்க்கையில் தூக்கியெறியப் படுவது போலவே கண்ணுக்குப் புலப்படும். ஏன் அந்த மனிதனுக்குக் கூட தன் செய்கைகளின் பலாபலன்கள் தெரியாமல் கூடப் போகலாம்.

ஆனால் இந்தச் சுமமகளை இலகுவாக்குவது என்ன?  இந்தச் சுமைகள் கொடுக்கும் அழுத்ததிலிருந்து எப்படி விடுபடலாம் என்பது தெரியயமலே இருந்தது.

இந்த இதயச்சுமைகள் என்றால் என்ன என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமையே அதிலிருந்து விடுபட முடியயமல் போன காரணம் என்பது மெதுவாகப் புரிந்தது.

இந்தச்சுமைகள் நாம் நம்மீது போட்டுக்கொள்ளும் விலங்கு. நாமே எம்மைச்சுற்றிக் கட்டிக்கொள்ளும் சிறை.

கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வரத் தொடங்குகிறேன்…….

இதுவே இன்று என்னெஞ்சில் முன்னிற்கும் நினனவு

அன்புடன்                                                                                                                        சக்தி

29.03.2008

______________________________________________________________________________

சுயம்

சுயம் என்றால் என்ன ?  மிகவும் பொதுப்படையான கேள்வி. எனக்குத் தெரியும் என்ற விடை எல்லோர் மனங்களிலும் துள்ளி விழுகிறது. ஆனால் இந்தச் சுயத்துக்கான விளக்கம் ஒவ்வொருவரைப் பொருத்தும் வித்தியாசமானதுவாக இருக்கும். காரணமமொவ்வொருவருடைய மனதினுள்ளும் நான் என்பதற்கு வித்தியாசமான விளக்கங்களை வைத்திருப்பதுவே இக்காரணம்.

ஒரு ஜந்து பேரை எடுத்துக்கொள்ளுங்கள் ஒருவர் எனக்குப் பொய்பேச வராது என்பார், மற்றொருவரோ எனக்குத் தற்பெருமை கிடையாது என்பார், இன்னுமொருவர் நான் சரியான முன்கோபக்காரன் என்பார், மற்றுமொருபவரோ எனக்கு பேராசை கிடையாது என்பார், மற்றுமொருவர் நான் இரக்கசிந்தையுள்ளவன் என்பார்.

எந்த ஒரு குணத்தை தான் மற்றவரில் காணவிழைகின்றாறோ அதே குணத்தை தன்னில் காண முயலும் ஒரு தன்னிச்சையான செயலே  மேற்கூறிய விளக்கங்களுக்குக் காரணம்.

நான் என்று எதுவுமில்லை என்று உணர்ந்தவனே தன்னை உணர்ந்தவனாகிறான் என்பது ஒரு வாதம். அப்போது இந்தச் சுயம் என்பதன் பொருள் என்ன? சுயத்தத இழந்தவன் ஒருவனால் மற்றவனுக்குப் போதிக்க முடியுமா?

தன்னைத்தானே உணர்வது என்பது என்ன ?  உலகில் எல்லோரும் தன்னைத் தானே உணர்ந்தவர்களாயும் ஆசாபாசங்களற்றவர்களாயும் மாறினால் இந்த உலக்ம் இயங்குமா ?

சரி இந்த த்ன்னைத்தானே உணர்வது என்பது ஒரு அடையமுடியாத நிலை என்றே வைத்துக் கொள்வோமே !  பின் எதற்காக அதை அடைவதை குறிக்கோளாகக் கூறப்படுகிறது.  இது ஒரு பரிபூரணநிலை இதை அடைவது என்பது யாபேரரலும் முடியாதது. இதை அடைவதைக் குறிக்கோளாகக் ககடுவதன் ம்ஊலம் ஒவ்வொருவரும் மனதில் தமக்கென ஒரு லட்சியபாதையை வகுத்துக் கொள்ள முடியும்.

சுயத்தை உணர்ந்து இந்தப் பரிபூரண நிலையை எய்தும் முயற்சியில் மனிதர்கள் வகுத்துக் கொள்ளும் வழிகளால் மனிததுவம் மிக்க  மனிதர்களாக வாழக்கூடிய சந்தர்ப்பத்தைப் பெற்றோமானல் அதுவே சுயத்தை உணர்ந்து, சுயத்தை இழக்காமல் வாழ்வதற்குரிய வழிவகையாகும்

அன்புடன்                                                                                                                                                                                                                                                                                                    சக்தி

30.03.2008

______________________________________________________________________________________________________

பொன்னான வருடம் பூத்தது

இன்று பூத்த வருடம். நெஞ்சில் புத்தம் ஒஉது உணர்ச்சிகளை வித்திட்டது. ஆமாம் நெஞ்சத்தின் சுமைகள் பல தானாக அகன்றது போலொரு இலேசான உணர்வு இதயத்தின் ஓரங்களை மெதுமையாக உரசுகின்றது.

எனது நெஞ்சத்தில் இன்று பூத்த பசுமையான உணர்வுகளில் முக்கியமானது அருமைத்தம்பி அந்தோணி முத்துவின் அன்பான பின்னூட்டமேயாகும்.

வாழ்க்கையில் தான் படும் இன்னல்களைப் பொருட்படுத்தாது, னற்றையோரை மகிழ்விக்க வேண்டும் என்னும் இந்த அற்புதமான அன்புத்தம்பியின் பாச உள்ளம் என்னெஞ்சை இந் நன்னாளில் தாலாட்டுகிறது.

குடும்பத்தில் கடைசியாக வந்து பூமியில் விழுந்தவன் நான். எனக்கு ஒரு தம்பியோ, தங்கையோ இல்லையே என்று பல பொழுதுகளில் ஏங்கியவன். இன்று எனது நெஞ்சத்தின் ஏக்கத்தைப்  போக்க தமிழன்னை தன் மடியில் தவழும் அன்புத் தம்பி, தங்கககள் பலரை தமிழ் என்னும் பாசமலையில் கட்டி என்ன்உடன் இணைத்துள்ளாள்.

அவர்களில் முத்தென மிள்ர்பவர் அந்தோணி முத்து, இவரின் இன்னல்களை என் மற்றுமிரு தம்பியர் சுரேஷ், விஷி இவர்களின் மூலமாகத்தான் அறிந்தேன் துடித்தேன். ஆனனல் அணைக்க வந்த ஆயிரம் கரங்கள் பற்றி அறிந்து மகிழ்ந்தேன்.

இன்று அந்தத் தம்பியே எனக்கு வாழ்த்துகிறான். ஆம் இந்த வருடம் சிறப்பானதுதான், இந்த வருடம் பொன்னானதுதான்.

அனைவரும் அனைத்தும் பெற்றுச் சிறந்து வாழ வாழ்த்துகிறேன்.

13.04.2008

——————————————————————–

உண்மையின் உறக்கம்

உண்மை உறங்குமா?

மிகவும் ஆழமான கேள்வி. அனைவரின் உள்ளத்திலும் எப்போதாவது ஒரு நாள் வந்து மனதை உளைத்து விட்டுப் போகும் ஒரு கேள்வி. ஏன் இந்தக் கேள்வி மனதில் பிறக்கிறது? எம் கண்முன்னாலேயே எமக்குத் தெரிந்த உண்மை புதைந்து போகும் போது மனதினுள் பூதாகரமாக எழுந்து விடுகிறது இக்கேள்வி.

வாழ்வில் நன்மை, தீமை என்னும் செயல்களுக்கிடையில் வரம்பாக, வேலியாக இருப்பது இந்த உண்மையே சமயங்களில் இந்த உண்மையே உறங்கிப் போவது போலத் தென்படும் போது நன்மைக்கும், தீமைக்கும், அர்த்தம் புரியாமல் குழம்பி விடும் மனோநிலை தோன்றுகிறது.

வாழ்க்கை மாயக்கண்ணாடி போன்றது பலசமயங்களில் உண்மை நிலையை எடுத்துக் காட்டாது அதற்காக அந்த உண்மை இல்லையென்றாகி விடாது, அது இல்லையென்றாகி விட்டால் உலகமே இயக்கமின்றி நின்று விடும். அதனால் தான் சமயங்களில் உண்மை தூங்கி விடுகிறது என்று சொல்கிறோம்.

ஏனென்றால் அந்த உண்மை வழி நடப்பவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அந்த உண்மைகள் விழித்துக் கொள்ளும் போது விலகி விடும் என்னும் ஒரு நம்பிக்கை அவன் பயணம் தொடர வழிவகுக்கிறது.

ஆனால் உண்மை உறங்கும் போது எமது நெஞ்சினில் அது ஏற்படுத்தும் காயம் வலிக்கத்தான் செய்யும். இருப்பினும் மனதைத் தளரவிடாதூண்மை விழிக்கும் வரை அந்த உண்மையின் பாதையிலே நடப்பது மனச்சாட்சி உள்ல அனவரது கடமையுமாகிறது.

கலங்காதீர்கள், முன்னோக்கிப் பாருங்கள் உண்மை விழித்துக் கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை, தொடரட்டும் உங்கள் பயணம்

அன்புடன்
சக்தி

——————————————————————–

சொல்லாத எண்ணங்கள் கோடி

ஒவ்வொரு மனிதருடைய உள்ளங்களிலும் புதைந்து போயிருக்கும் சொல்லாத எண்ணங்களுக்கு மட்டும் எப்படியோ பேசும் சக்தி வந்து விட்டால் அவை பகன்றிடும் செய்திகள் கொடுக்கும் விபரங்கள் ….. அப்பப்பா நினனத்துப்பார்க்கவே முடியாமல் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒருவரை முதற்தடவையாகக் காணுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அவரைப்பற்றிய பல எண்ணங்கள் எம் மனதினில் ஊற்றெடுக்கும். அவைகளில் சில அவரை மகிழவைக்கக் கூடியவையாக இருக்கும், மற்றும் சிலவோ அவரை வேதனைப்படுத்துவதாகவோ இல்லை ஆத்திரப்படவைப்பதாக இருக்கும்.

சாதாரண மனிதர்கள் அவர் மகிழக்கூடிய விடயங்களை மனந்திரந்து சொல்லி விடுவார்கள் ஆனால் அவருக்கு எதிர்மறையான விடயங்களை உள்ளத்தின் அடியில் புதைத்து விடுவார்கள். இதுதான் யதார்த்தம். இதற்கு நானொன்றும் விதிவிலக்கானவல்ல.

அப்படி பல நேரங்களில், பல விடயங்கள், பல காரணங்களுக்காக உள்ளத்தின் அடியில் புதைக்கப்படுகின்றன. அவையே சொல்ல முடியாத கோடியாக உருப்பெறுகின்றன.

அப்படி சொல்ல முடியாமல் போனவைகள் எம்மால் மறக்கப்பட்டு விடுமின்றனவா என்றால், இல்லை என்பதே விடையாகும்.

பல சமயங்களில் அவைகளைக் கிளறிப் பார்த்து நாம் மீண்டும் எமது சொல்ல முடியாமல் போன காரணங்களைச் சீர்தூக்கிப் பார்த்து எம்மைச் சமாதானப்படுத்திக் கொள்ளுகிறோம்.

இதையே கவியரசர் கண்ணதாசன் சொல்லில் வருவது பாதி, நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி என்று அழகாக தனது திரைகானமொன்றில் எடுத்துக் காட்டுகிறார்.

நெஞ்சிலே உதிக்கும் எண்ணங்கள் எல்லாவற்றிற்குமே வார்த்தை வடிவம் கொடுக்கப்பட்டால் உலகில் உறவுகள் அனைத்துமே சீர்குலையக்கூடிய சந்தர்ப்பம் மேலோங்கும்.

ஏனேனில் சொல்பவை எவ்வளவுதான் உண்மையாக இருந்தாலும் , அது மற்றவர்களிடமிருந்து வரும்போது கொஞ்சம் கசக்கத்தான் செய்யும். இதுதான் யதார்த்தம்.

உள்ளத்தைக் கொஞ்சம் அலசிப்பார்த்தேன்

அன்புடன்
சக்தி

——————————————————————–

மறுவினைகள்

  1. அன்புள்ள அண்ணன் சக்தி அவர்களுக்கு,

    அனைத்தையும் வாசித்தேன்.
    எல்லாமே போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்.

    என் உணர்வுகளை எழுத வார்த்தைகளைத் தேடுகிறேன்.
    ஏனோ தோற்றுவிட்டேன்.

    என் உள்ளத்தில் மிக மிக உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவர் நீங்கள்.

    உங்களைப் பாராட்ட எனக்குத் தகுதி இல்லை.

    உங்கள் விருப்பங்களும், எண்ணங்களும் விரைவில் ஈடேற இறையை உளமாற வேண்டுகிறேன்.

    அன்புடன்
    அந்தோணி முத்து

  2. அன்பின் தம்பி அந்தோணி முத்து,

    என் வலைப்பூவின் முதலாவது பின்னூட்டத்தை இட்டது தெய்வத்தின் ஒரு திருக்குழந்தை என்னும் எண்ணம் என்னுள்ளத்தில் திருப்தி, ஆனந்தம் என்னும் உணர்ச்சிகளை ஆலத்தூவி விட்டது.

    தம்பி உங்களது இந்தப்பின்னூட்டம் நான் வணங்கும் இறையே இறங்கி வந்து என்னை வாழ்த்தியது போன்ற ஒரு நெகிழ்வை எனக்குக் கொடுக்கிறது.

    நீங்கள் வாழ்வில் என்றுமில்லாதவாறு புகழ் பெற்று உயர்ந்த நிலையை அடையும் வரை இந்த அண்ணணின் சுவாசக் காற்று விடைபெறாது இருக்க வேண்டும் என்பதுவே எனது பிரார்த்தனை.

    வாழ்வில் தடுமாறும் இளய தலைமுறைக்கு வாழும் உதாரணமாகிய நீங்கள் நன்றாக வாழ அந்த எல்லோருக்கும் பொதுவான இறையை மனமுருகி வேண்டிக்கொள்கிறேன்.

    அன்புடன்
    அண்ணன் சக்தி

  3. உங்கள் வலைப்பதிவுகள் நன்றாக பலமுறை உங்களது சிந்தனிக்கு பின் எழுதியது என்பது தெள்ள தெளிவாக உள்ளது


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்: