சத்தமுமில்லை யுத்தமுமில்லை

சத்தமுமில்லை யுத்தமுமில்லை என்ற இந்தத் தலையங்கம் உருவானதற்குக் காரணம் சத்தமில்லாமல் உள்ளத்தில் நடக்கும் ஆயிரம் யுத்தங்களின் சாரத்தை அன்புடன் என்னும் குழுமத்தின் அன்பு உள்ளங்கலோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு அவாவினால் நான் உந்தப்பட்டதினாலேயாகும்.

இது ஒரு தொடர் வடிவிலே வந்தாலும். ஒவ்வொன்றும் தனியானவை.

அன்புடன்                                                                                                சக்தி

_____________________________________________________________________

1. போர்க்களத்தில் நான்

என்ன போர்க்களமென்கிறான் ! நான் என்கிறான் ! என்ன இது அன்புடனில்
மீண்டும் ஒரு சச்சரவுக்கு இவன் வழிவகுக்கிறானா ? என்று நீங்கள அனைவரும்
குழம்பிப் போகாதீர்கள்.

ஆம் இது போர்க்களம் தான் இங்கே போடப்போவதும் யுத்தம் தான். ஆனால் இது
சத்தமில்லாதொரு யுத்தம். அப்படி என்ன யுத்தம் ? அதற்கென்ன தேவை ? என்று
நீங்கள் கேட்பது புரிகிறது அன்பர்களே.

அமைதி, அன்பு என்று வார்த்தைக்கு வார்த்தை அள்ளி வீசும் சக்திதாசனா
யுத்தம் போடப்போகிறான்? கேள்வி எழுகிறது அல்லவா? நியாயமான கேள்விதான் .

ஆனால் நான் போடப்போகும் யுத்தம் என்னுடன் நானே நடத்தும் யுத்தம். என்
மனதுக்குள் விளையும் அளவிலா உளைச்சல்களுக்கு உள்ளார்த்தம் கற்பிக்கும்
யுத்தம்.

என்ன அழுக்களை அம்பலத்தில் களையப்போகிறாயா? புரிகிறது உங்கள் கேள்விகள்.
ஆனால் நான் புரியப்போவது ஒரு புனருத்தாரணம்.

பல சமயங்களில் பல செயல்களைப் புரிகிறோம் அதற்குக் காரணமும் தெரியாமல்,
விளக்கமுமில்லாமல் நாமே நமக்குள் நடத்தும் வேள்விகள் ஆயிரம். நம்முடன்
நாம் போடும் யுத்தம் எம்மைத் தராசுத் தட்டிலே தூக்கி நிறுத்துகிறது.

நான் பகிரங்கமாக என் மனயுத்தங்களை அலசப்போவதினால் உங்களுக்கென்ன நன்மை
என்று நீங்கள் எண்ணலாம். நான் எழுதப்போவது அனைத்தையும் கோர்வையாகத்
தொடராக ஏதாவது இதழிலோ அன்றி இணைய இதழிலோ எழுதிவிட்டு, அதைப் புத்தகமாகப்
போட்டிருக்கலாம்.

ஆனால் என் மனயுத்தங்களை எதுவித பிரதிபலனுமே எதிர்பாராமல்
உண்மைக்கருத்துகளை அப்படியே உள்ளபடியே உரைக்கும் என் அன்புச்
சொந்தங்களின் முன்னால் வைப்பதினால், படிகும் சில இளநெஞ்சங்களின்
சிந்தனையைத் தூண்டி அவர்களுக்கு அது ஏதாவது வகையில் பயன்படுமா? என்றொரு
ஆவல் என் ம்னதில் எழுந்ததின் விளைவே இது.

எனக்கு மன உளைச்சல் ஏற்படும் வேளையிலெல்லாம் அவற்றை இறக்கி வைக்க உதவிய,
உதவும் அன்புடனுக்கு நானளிக்கும் அன்புக்காணிக்கை என்றே வைத்துக்
கொள்ளுங்களேன்.

எழுத்தாளன் நான் என்று என்னை நானே வரித்துக் கொள்ளவில்லை காலச்சக்கரம்
என்னை எழுத்து உலகத்தினுள் உருட்டியது. நான் எழுதி அனுப்பும் அனைத்து
பத்திரிகைகளுமே நான் எழுதுவதைப் பிரசுரிக்கக் துடித்துக் கொண்டிருக்கும்
ஒரு எழுத்தாளனல்ல நான்.

இன்று கூடச் சளைககமல் நான் எத்தனையோ பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பிக்
கொண்டிருக்கிறேன், அவர்களும் சளைக்காமல் அதைக் குப்பைத்தொட்டிக்குள்
கசக்கிப் போட்டுக் கொண்டெயிருக்கிறார்கள். ஆனால் அவற்றையெல்லம் எமக்கு
அவர்கள் கூறும் ஒரு செய்தியாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.

ஆமாம், நீ கவிஞனுமில்லை, எழுத்தாளனுமில்லை ஒரு சாதாரணமானவன், உன்னை
வளர்த்துக் கொள்ள இன்னும் எத்தனையோ மைல்கள் கடக்க வேண்டும் என்று எனக்கு
அவர்கள் புத்தி புகட்டுகிறார்கள் என்றே எடுத்துக் கொள்கிறேன்.

இதை நான் இவ்விடத்தில் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், வளரும் எத்த்னையோ
இளங் கவிஞர்கள், எழுத்தாளர்கள் சிலசமயங்களில் இரண்டு மூன்று
முயற்சிகளிலேயே மனம் தளர்ந்து விடுவதைப் பார்த்திருக்கிறேன். உங்கள்து
ஆசை, இலட்சியம் எழுத வேண்டும் என்றால் எந்நிலையிலும் ம்னதைத்
தளரவிடாதீர்கள். உங்கள் மீது விழும் கற்கள் ஒரு காலத்தில் பூக்களாக
மாறும். இதை அனுபவத்தில் கண்டவன் நான்.

” வளரும் சமுதாயமே எனைப்பார்த்து விழித்துக்கொள் ! காலத்தை விரயஞ்
செய்யாதே ” என்று அடித்துச் சொன்னார் கவியரசர் கண்ணதாசன்

ஒரு மனிதன் தன்னை, தனது மனதை சரியான வகையில் வெளிப்படுத்திக் கொள்கிறானா?
என்பதை எதை வைத்து ஊர்ஜிதப்படுத்த முடியும்?.
எழுத்துக்களால் எதைச் சாதிக்க முடியும்? ஒரு எழுத்தாளன் சமுதாயத்தினுள்
வகிக்கும் பங்கு என்ன? அவனுக்கென்ன இருக்கும் எழுத்துத் தர்மம் எதைச்
சொல்கிறது?
பல கேள்விகள் எனது மனதைத் துளைக்க, பல வேள்விகள் என்னுள்ளே யாகமாய்
கொழுந்து விட்டெரிய, விடைகாண முற்படும் முயற்சியில் விளைந்த யுத்தமே இது.

ஒரு வீணை தூசு படிந்து ஒரு மூலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. அந்த
வீணையின் சொந்தக்காரியாக இல்லாத, அந்த வீட்டிற்கு ஒரு வேலைக்காரியாய்
வந்த ஒரு பெண் தூசு படிந்த வீணையைத் தட்டி இனிய கீதம் எழுப்புகிறாள்.

” நான் யார் உன்னை மீட்ட – வரும்
 நன்மைக்கும், தீமைக்கும் வழிகாட்ட ” என்ற கேள்வி அவளுக்குள் எழுகிறது.
கவியரசர் கண்ணதாசனின் வைரவரிகளில் வசந்தமாளிகை என்னும் படத்திலே வரும்
பாடலொன்றின் வரிகள் இவை.

அதேபோல நான் யார் எனது அனுவங்களைக் கொட்டி, எனது உள்ளத்தின்
போராட்டத்தின் மூலம் உங்களுக்கு வழிகாட்ட? என்னும் கேள்வி உங்கள்
மனதினில் எழலாம், எழுவதுதான் நியாயம்.

ஆனால் பகழ்பெற்ற எழுத்தாளனக இல்லாத நான், எழுதுவதால் எழுத்துத் தர்மத்தை
மதிக்கத் தலைப்பட்டேன். என்னுடைய சமகாலப் பதிவுகள் ஏதாவது வகையில்
எங்காவது பதியப்பட வேண்டும் என்னும் ஆதங்கம் என்னுள் அணையாத தீயாக
எரிந்து கொண்டேயுள்ளது.

இங்கு நான் எழுதப்போவது அனைத்தும்  உண்மை, உண்மையைத் தவிர வேறு
ஏதுமில்லை. என்ன திகைத்து விட்டீர்களா? கனம் கோட்டார் அவர்களே ! எனச்
சத்தியப்பிரமாணம் எடுக்கவில்ல நான்.  இது எனது சுயசரிதமும் இல்லை. என்
மனமென்னும் யுத்த களத்தில் தினம், தினம் ஆயிரம் போராட்டங்கள்.

அந்த யுத்ததின் விளைவுகளை அன்பு நெஞ்சங்களாகிய உங்களோடு பகிர்ந்து
கொள்வதால், அதிலே 1% உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தால், அதுவே எனது
எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுவேன்.

இங்கே வரப்போகும் எழுத்துக்கள், ஓரிடத்தில் அமர்ந்து கருவமைத்து
சீராக்கப்பட்ட தொடரல்ல, நான் எங்கேயோ, எப்போதோ எழுதிய தொடர்களுமல்ல.
மனதிலிருந்து அப்படியே விழும் உணர்வுகள். களிமண்னை உங்கள் கைகளில்
கொடுக்கிறேன், அதைத்தட்டி என்ன உருவமாகப் படைப்பதுவும் உங்கள் விருப்பம்,
திறமை.

இல்லை திரும்பச் சக்கையாக உருட்டி என் மீது வீசுவதாக இருந்தாலும் எனக்கு
ஆட்சேபணையில்லை.

சமீபத்தில் இலண்டனிலே, இங்கிலாந்துப் பாராளுமன்ற எதிர்க்கட்சியாகிய
கன்சர்வேடிவ்(Conservative) கட்சியின் வருடாந்தப் பொதுக்கூட்டம்
நடைபெற்றது. அப்போது அதிலே உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவர் டேவிட்
கமரன்(David Cameron) கையிலே எதுவித குறிப்புகளும் இல்லாமல், கண்முன்னே
திரையில் ஓடிக் கொண்டிருக்கும் குறிப்புக்கள் எதுவும் இல்லாமல்
உரையாரற்றினார்.

ஆமாம், தனது மனதில் தோன்றியவைகளை அப்படியே தன் முன்னால்
மர்ந்திருந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இப்படி ஒரு கட்சியின் தலைவர்
எதிவித த்யாரிப்புகளும் இல்லாமல் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் பேசியது
இதுவே இங்கிலாந்தில் முதற்தடவை என்று கூறப்பட்டுள்ளது

இங்கே நான் வரையும் சித்திரமும், மனதில் கருவின்றி, மனிதநேயத்தின்
அடிப்படையில் எழுந்த தேடலின் வழியாக விழைந்த முயற்சியே.

போர்க்களத்தில் நடுவினிலே
    போராடும் உணர்வுகள்
தேர்க்க்ளத்தில் வடமிழுக்கும்
    தெளிவான ஓலங்கள்
நீர்க்களத்தில் ஓடம் விடும்
     நிஜமான நிழல்கள்
நேசக்களத்தில் நீராடும்
     நேரான நினைவுகள்

நெஞ்சத்தைத் திரந்து கருத்துக்களைக் கொட்டி களம் அமைத்து விட்டேன். இனி
ஒவ்வொரு இழையாக நெஞ்சத்தில் பின்னிய வலையைப் பிரிக்கப்போகிறேன்

அன்புடன்
சக்தி

__________________________________________________________________

 

 

 

யுத்தம் 1

நான் எழுதும் எழுத்துக்களின் ஆரம்பம் கவிதை. என்னை யாரென்று எனக்கே
அறிமுகப்படுத்தியது கவிதை. என்னுள் இருக்கும் குறைகளைச்
சுட்டிக்காட்டியது கவிதை. அவைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைக்
கொடுத்தது கவிதை. மற்றவர் என்னைப்பார்த்துக் கூறும் கருத்துக்களை அவை
எவ்வகையானவையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள பழக்கியது கவிதை, பழக்கிக்
கொண்டிருப்பது கவிதை.
ஆமாம், ஆக மொத்தம் எனது வாழ்க்கையே கவிதை.
ஆனால் கவிதையையே மூலாதாரமாக, அடிப்படையாக ஒரு கவிதை போலவே வழ்ந்து
விடுவது யாதார்த்தமான செயலா?

நாம் வாழும் இந்தப் பூமியே ஒரு கவியரங்கமாகவும், அதிலே வாழும் அனைவரும்
என்னைப்போலவே கவிதையை நேசிப்பவர்களாக இருந்தால் மட்டுமே, மனதுக்கு
விரோதமில்லாத ஒரு உண்மைக் கவிஞனாக வாழ்வது சாத்தியம். ஆனால் உண்மையான
உலகம் அப்படியில்லையே !

குத்துச்சண்டை போடுபவன், மிகவும் திறமையானவனாக இருந்தாலும் கூட எங்கே
அவனது திறமையைக் காட்ட முடிகிறது? ஒரு குத்துச் சண்டை மேடையிலே. அதாவது
அவனைப்போலவே அவனுடன் போட்டியிடுபவனும் குத்துச் சண்டை விதிகளை
மதிப்பவனாகவும், அவர்களை மேற்பார்வை செய்வதற்கு குத்துச் சண்டை விதிகள்
தெரிந்த ஒரு மேற்பார்வையாளரின் முன்னிலையில் மட்டுமே அவனால்
ஜெயிக்கமுடிகிறது.

நிஜவாழ்க்கையில் அவனால், அவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும்
ஜெயிப்பது மிகவும் கஷ்டமாகிறது ஏனெனில், அவனுடன் சண்டையிடுபவன் குத்துச்
சண்ட விதிகள் தெரியாதவனாக இருக்கலாம், பையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து
அவன் மீது ஏற்றி விடுவான்.

கவிஞர்களும் அப்படியே ! கவிதை தெரிந்தவர்களுடன் வாழும் போது அவன்
கவிதையாக வாழ்ந்து விடமுடிகிறது. கவிதையைப் புரியாதவர்கள் மத்தியில் அவன்
பைத்தியக்காரன் என்னும் பட்டம் பெறுவதே சாத்தியமாகிறது. உதாரணமாக எமது
பாரதியாரையே எடுத்துக் கொள்ளலாமே !

இதற்கு மற்ருமொரு உதாரணமாக அன்புடன் குழுமத்தை எடுத்துக் கொண்டால்(மற்றைய
குழுமங்களில் அனுபவம் இல்லாததினால்) இங்கே அனைவரும் கவியுள்ளம்
கொண்டவர்களக, ஒரே விதமான மனப்பான்மை கொண்டவர்களாக இருகிறோம் அதனால்
முகமறியா வேளைகளில் கூட உண்மை அன்பை தாராளமாகப் பொழியக்கூடியதாக
இருக்கிறது.

ஆனால் வெளியே இந்தப் பரந்த உலகில் எத்தனை இடங்களில் உண்மை அன்பைக் கொட்டி
துன்பத்தை வாங்கிக் கொள்ளவேண்டிய நிலையில் நாம் இருந்திருக்கிறோம்.
எண்ணிப்பாருங்கள். பெரும்பான்மையோருக்கு நிச்சயம் குறைந்தது ஒரு
அனுபவமாவது இருக்கும்.

என் மனதில் நீண்டதொரு யுத்தம் பலகாலமாய் நடந்தது. நானேன் கவிதைகளில்
இத்தனை நாட்டம் கொண்டேன்? இன்றுவரை இந்தப் போராட்டம் தொடர்ந்து
கொண்டேயிருக்கிறது. என்னைக் கவிதைபால் ஈர்த்த அந்த ஒரு நிகழ்வைத் தேடித்
தேடி என் மனம் ஓடிக் கொண்டேயிருக்கிறது.

இடையிடையே மனச்சோர்வு? உனக்கேன் இந்த வீண் தேடல் ? நீ என்ன உலகம்
கண்டிராத மாபெரும் கவிஞனோ? என்று என்னுள்ளமே எனைப்பார்த்து ஒரு அம்பு
தொடுக்கும்.

ஏன் தலைசிறந்த கவிஞனாக இருக்கிறான் என்று அனைவரும், மதிக்கும் போது
மட்டும் தான் அவன் கவிஞனா? இல்லை தான் எழுதும் கவிதைகள் ஒவ்வொன்றிலும்
தன் உணர்வுகள் உயிர் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றன என எண்ணும் எவருமே
கவிஞர் தான் என்று மறுமுனையிலிருந்து ஒரு எதிரம்பு வரும்.

மறுபடி மனம் தனது தேடல்களின் வழி ஓடும்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் பல நிகழ்வுகள் நடந்திருக்கலாம், பல குடும்பச்
சிக்கல்கள் இருந்திருக்கிலாம். சிலருக்கு தமது இளம்பிராயத்து நினைவுகள்
மகிழ்வானவையாக இருக்கலாம், வேறு சிலருக்கு அவை மறந்து போகவேண்டிய துயரமான
கனவுகளாக இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை நான் பிறந்தது ஒரு மத்தியவர்க்கக் குடும்பத்திலே.
தந்தை மிகவும் பரந்த மனப்பான்மை உடையவர். தாயார் அன்பே உருவானவர். ஆனால்
எனது கவிதையுணர்வுகள் அவர்களிடமிருந்து ஆரம்பித்தனவா என்றால், இல்லை
என்பதுவே எனது மனதுக்குக் கிடைக்கும் விடை.

 

 

 

அப்படியானால் எங்கேயிருந்து வந்தது இக்கவிதையுணர்வுகள். இன்னமும் நான்
என்னுள் தேடிக் கொண்டேயிருக்கிறேன் விடைகாண முடியா வினா இது.

என்னை நானே துருவித் துருவிப் பார்க்கிறேன். எனக்குள்ளே இக்கேள்வி
விஸ்வரூபமாக வியாபித்திருக்கின்றது. என்ன இது இவன் இந்தக் கேள்விக்கு
விடைகாண இப்படித் தவிக்கின்றானே ! அப்படி என்னதான் கண்டுவிடப் போகிறான் ?
என்று உங்களில் சிலர் வினவலாம். இந்தக் கேள்விக்கு விடையைக்
கண்டுபிடித்தால் என்னை நானே கண்டு பிடித்ததிர்குச் சமன். என்னுள்லே
துடித்துக் கொண்டிருக்கும் பல உணர்வுகளுக்கு விடுதலை கிடைத்து விடும்.

இது ப்ரு பூட்டு, இந்தப்பூட்டின் சாவி மட்டும் கைக்கு வந்து விட்டால் …
வாராமல் வைத்திருப்பதுதான் அனைவர்க்கும் மேலானவனின் அன்றாடக் கடமையோ ?

எனது குழந்தைப்பருவத்து நினைவுகள், அதாவது எனது நினைவு வடிதட்டில் சிக்கி
நிற்கும் சில எண்ணத்துளிகளைப் புரட்டிப்பார்க்கிறேன். கவிதையின் பால்
நான் என் மனதைப் பறிகொடுப்பதற்கு முனனல் தமிழ் மேல் காதல் கொண்டு
விட்டேன் என்பது மட்டும் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.

காதலாகிப் போனேன்
தமிழின் பால்
காந்தம் இரும்பைக்
கவர்வது போல
நீச்சலடித்தேன் தமிழ்க்கடலில்
நினைவு தெரிந்த நாள்முதலாய்

அப்போது ஈழத்தில் தற்போதைய சூழலோடு ஒப்பிடுகையில் அமையான சூழல் என்றே
சொல்ல வேண்டும். எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும் எனது தந்தையுடன்
தெருவால் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு அரசியல் பொதுக்கூட்டம்
நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே ஒலிப்பெருக்கியில் , தமிழரசுக் கட்சித்
தலைவர்களில் ஒருவரான திரு வன்னியசிங்கமென்பவரது பேச்சு ஒலிபரப்பாகிக்
கொண்டிருந்தது. அவரது கணீரென்ற தமிழ்ப் பேச்சு என்னை தடுத்து
நிறுத்தியது. எவ்வளவு நேரம் அப்படியே நின்ரேன் எனத் தெரியாது, எனது தந்தை
வந்து என் கைகளைப் பற்றி அழைத்ததும் தான் நினைவுலகிற்குத் திரும்பினேன்.

அச்சம்பவம் இப்போதும் என் மனதில் அப்படியே பதிந்துள்ளது. அதை என்
தந்தையும் பல்முறை கூறக் கேட்டுள்ளேன்

தமிழின் இனிமை. அதைப் பிரயோகிப்பவர்கள் அதைத் தமது வீச்சுக்கு ஏற்ப
உபயோகிக்கக் கூடிய தன்மை. தமிழ்மொழியில் இருந்த கனிவு. ஒரு உணர்வை
விபரிக்க தமிழ் மொழியில் இருந்த ஆளுமை அப்படியே என்னைத் தன்னுள்
அமுக்கிக் கொண்டது.

இந்தத் தமிழின் சுவை என்னைக் கவிதையின் பால் திருப்பியதோ ?

அப்போது, இப்போது, எப்போதும் கூட நான் ஒரு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின்
ரசிகன்.

எம்.ஜி.ஆர் என்னும் ஒரு தனிமனிதன் சகாப்தமாகியதற்கு பல விமர்சனங்கள்
உண்டு. அவரை அரசியல் ரீதியில், சினிமா ரீதியில் விமர்சிப்பவர்கள் பலர்
உண்டு. ஆனால் நான் கவரப்பட்டது அவரது கருத்துக்களால். அவரது
சினிமாக்களில் வரும் அவரின் பாத்திரங்களின் விசாலமான மனப்பான்மையினால்.

அது சினிமா, அவர் உண்மையான் வாழ்க்கையில் அப்படி இல்லை என்ரு  பலர்
என்னுடன் வாதிடக்கூடும். ஆனால் அப்படியான வாதங்களில் ஈடுபடுவதல்ல எனது
நோக்கம்.

சினிமாக்களிலே அவர் கூறிய கருத்துக்கள் புனிதமானவை. அந்தக்
கருத்துக்களால் கவரபட்டவர்கள் தாம் நல்லவர்களாக நடக்கத் தலைப்படுவதே
சாதாரணமான நிகழ்வு. அப்படி பலர் அவரைப் பின்பற்றி நல்லவர்களாக,
மற்றவர்களுக்கு உதபுவர்களாக வாழத்தலைப்பட்டால் அது சமுதாயத்துக்கு ஒரு
சேவை தானே.

சமூகம், ஏழை, வர்க்கபேதம் என்பன மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னைக்
கவிதைபால் திருப்பியதோ ?

சிறுவயதிலிருந்தே நான் சினிமாப் பாடல்களை மிகவும் ஆர்வமாகக் கேட்பதுண்டு.
அப்படிக் கேட்கும் போது தமிழின் பால் இருந்த காதல் பாடல் வரிகளை மிகவும்
உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டும்.

அப்படிக் கவனித்து, கவனித்து கவரப்பட்டேன் கவியரசர் கண்ணதாசன் பால்.
அப்பப்பா அப்போதுதான் எனக்குப் புரிந்தது கண்ணதாசன் என்னும்
காவியமனிதனுக்கிருந்த தமிழாற்றல். ஒவ்வொருபாடலும் ஒவ்வொரு கோணத்தில்
தமிழை ரசிக்கத் தூண்டியது. இந்த வரிகளுக்கு இருக்கும் சக்திதான் என்ன !
தமிழன்னையின் அழகை, அபூர்வ இனிமையை அந்தக் கவித்தலைவன் கையாண்ட விதம்
என்னைக் கிறங்க வைத்தது.

வாலிபப்பருவத்தில் அந்த பருவத்துக்கேயுரிய காதலுணர்வுகள் எந்தன் நெஞ்ச
வீணையை மீட்டத்தொடங்கியதும் தான் என் கைகள் கவிதை என்னும் பெயரில்
கிறுக்கத்தொடங்கின.

எமது நெஞ்சத்து உணர்வுகள் வடிந்தோட ஒரு வாய்க்கால் தேவைப்படுகிறது. அது
சிலருக்கு ஆத்திரமாக இருக்கலாம், சிலருக்குக் கோபமாக இருக்கலாம்,
சிலருக்கு வன்முறையாக இருக்கலாம், சிலருக்குக் கவிதையாக இருக்கலாம்,
சிலருக்கு அழுகையாக இருக்கலாம்.

எது எனது கவிதையின் பிறப்பிடம் என்பதைத் தேடவே இந்த அல்சல். காதலென்னும்
உணர்வு மேகம் இதயம் என்னும் மலையை உரசும் போது பிறந்த ஊற்றாகவே
கவிதையுணர்வுகள் என்னுள் விழித்தன போலும்.

______________________________________________________________________________

யுத்தம் 2

“இன்று போய் நாளை வா” என்றொரு அவகாசம் கொடுத்ததாக இராமாயணத்தில் ஒரு
நிகழ்வு. அதேபோல நானும் போர்க்களத்திலிருந்து ஒரு சிறு விடுமுறை
எடுத்துக் கொண்டு மீண்டும் களத்தில் கால் நனைக்கிறேன்.

நெஞ்சம் துஞ்சாத போதெல்லாம் அஞ்சிக்கொண்டிருக்கிறது என்றான் ஒரு அறிஞன்.
நினைவுகள் என்னும் கல்லைக் கட்டி கனவுகள் என்னும் ஆழியில் இதயத்தை மிதக்க
விட்டால் அதனால் மிதக்க முடியுமா? அமிழ்வது ஒன்றேதன் அதன் முடிவு.

அதே போல எமது மனங்களிலும் நினைவுகள் கனமாக சுமஒயாகத்தான் இருக்கின்ரன.
இவற்றில் சில கசப்பையும், மற்றும் சில சுகத்தையும் கொடுக்கின்றன.

சுகம் கொடுக்கும் நினைவுகளை மாத்திரம் கட்டிக்காத்துக் கொண்டு, கசக்கும்
நினைவுகளைக் கசக்கி தூர எறிந்து விட மனது துடிக்கும் ஆனால்
முடிவதில்லையே !

நினைவுகளின் ஆழத்தில் நித்தியமும் சுட்டெரிக்கும் நினைவுகள் பல, சுகந்தம்
கமழும் ஞாபகங்கள் பல, மறந்துவிடத் துடிக்கும் மனக்கசப்புக்கள் பல. ஆமாம்
இவைகளெல்லாம் ஒன்றாகக் கலந்து ஆழப்பரந்து கிடக்கும் ஆழியே எமது நினைவுச்
சுரங்கம்.

இதனுள் ஏதோ ஒரு மூலையில் இனிமையாகக் கேட்கும் அந்த நாதத்தைத் தேடி என்
செவிகள் கூர்மையடைகின்றன. கால நதிக்கரையில் நான் கடந்து ஒரு நாற்பது வருட
காலங்களை பின்னோக்கி என்னுள்ளம் ஓடுகிறது.

ஆமாம் ! அந்தக் காலப்பருவம் ஒரு விளையாட்டு மைதானம் தான். அங்கே நடக்கும்
விளியாட்டுக்கள் மனதை இதமாக்கும் இன்ப விளையாட்டுக்கள். வரவின் வழி
தெரியாது செலவின் வலி புரியாது வாழ்ந்து முடித்த பருவங்கள் அவை.

அந்தப்பருவத்தின் கோடைமர நிழலாக அன்னை தந்தையர். நிழலின் அருமை
வெய்யிலில் தெரியும் என்பார்கள், அப்போது இந்த மூடனின் வானத்தில் உலவிய
ஆதவன் கொடுத்த வெப்பத்தின் தகிப்பைச் சரியாக புரிந்து கொள்ளாததினால்,
நிழலின் அருமை கூடை புரியாது போயிற்றோ ?

இனிமையான பெற்றோர் கொடுத்த இதமான அணைப்பின் கதகதப்பில் நெஞ்சத்தில்
துஞ்சும் கொஞ்சம் ஏக்கங்கள் கூடக் காற்றாய்ப் பறந்து போகும்.
அந்த இளவயதுக் கால நண்பர்கள் இருக்கிறார்களே! அவர்கள்
வித்தியாசமானவர்கள். நட்பெனும் நேசக்கோபுரத்திற்கு அத்திவாரம் போட்டு,
வாழ்க்கையில் ஒருவனுக்கோ அல்லது ஒருத்திக்கோ நட்பை வரையறுத்துக்
கொடுப்பதே அந்தக்காலத்து நட்புத்தான். அந்த நட்பின் அனுபவம் தான்
வாழ்க்கையில் தொடர்ந்து வரும் நட்புகளுக்கு அடி சமைத்துக் கொடுக்கிறது.
ஆனால் அந்த நட்புக்கள் கொடுத்த அனுபவம் சில சமய்ங்களில் எமக்குத் துணை
வரத் தவறி விடுகின்றன. நட்பு எனும் பெயரில் சுயநலவாதிகளின் வலையில்
விழுந்திருந்த அனுபவம் இருந்தும் கூட சிலசமயங்களில் பிற்காலப்பகுதிகளில்
அவை எமக்குப் பாடங்கள் போதிக்கத் தவறி விடுகின்றன.

அந்த இளமைக்காலத்திலே சிலபேரின் நட்பை நாம் வலிந்து வாங்கத்
தலைப்படுகிறோம். அவர்களது நட்புக்காக எதையுமே விலையாகத் தரத் தயங்க
மாட்டோம்.

அப்படித்தான் எனக்கொரு “நண்பன்” கிடைத்தான். கிடைக்கவில்லை. அவனை நண்பனாக
நான் விலைக்கு வாங்கி விட்டேன். எப்படி என்கிறீர்களா ? அப்போது நான்
படித்த அந்த நான்காம்வகுப்பிலேயே அவன் தான் மிகவும் பலசாலி, அனைவரும்
பவனது பலத்துக்குப் பயந்தார்கள். அவர்களை மிகவும் சாதாரணமாக அடக்கி
வைத்துவிடுவான். அவனை நண்பனாக அடைவது என்ரால் அது ஒரு மிகப்பெரிய சாத்னை
என்றொரு கருத்து நிலவி வந்தது.

ஆனால் அவந்து குடும்ப நிலைமை எனது குடும்பநிலைமையை விட
குறைந்தது(பொருளாதாரரீதியில்), அதனால் அவனது நட்பை நானடைய முயற்சித்தபோது
அவன் அதற்கு கூலி கேட்டான்.

இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

எனது தந்தை வெளியூர்களிலே தான் வேலைபார்த்து வந்தார். நாம்
யாழ்ப்பாணத்தில் எமது வீட்டில் அம்மாவுடன் தங்கியிருந்தோம். தந்தை
மாதத்தில் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தான் வருவார். வருவதற்கு முன்னர்
கடித மூலம் வரும்போது என்ன வாங்கி வருவது என்று கேட்பார். நானும் எனது
தாயாரிடம் ஏதாவது விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்களைச் சொல்லி
விடுவேன். அவரும் எங்கெல்லாமோ அலைந்து அதை வாங்கி வருவார்( இதை எழுதும்
போது என் தந்தையின் ஞாப்கம் என் கண்களில் நீரைத் திரளவைக்கிறது).

அப்படி வாங்கிய பொருட்களைப் பற்றி நான் இந்த நண்பனுக்கு பள்ளியில்
கூறும்போது, அவன் தான் என்னுடன் நண்பனாக இருப்பதற்கு அந்தப் பொருளை
இலஞ்சமாகத் த்ரும்படி கேட்பான். எப்படிக் கொடுப்பது? பள்லிக்கூடத்துக்கு
அப்பொருளைக் கொண்டு வரமுடியாதே !
அதற்கும் அவன் மார்க்கம் வைத்திருப்பான், அப்பொருளை யாருக்கும் தெரியாமல்
என்னுடைய வீட்டு வாசல் கேட்டுக்கருகில் மறைத்து வைத்துவிடு, நான் வந்து
எடுத்துக் கொள்கிறேன் என்பான்.

அப்படி என்கையிலிருந்து அவன் கைக்கு மாறிய பொருட்கள் ஏராளம். ஆனால்
அடுத்தநாள் பள்ளிக்கூடத்தில் தான் அந்தப் பொருளுடன் எப்படி விளையாடினேன்
என்று அவன் கூறும்போது அவன் கண்களில் பளிச்சிடும் ஆனந்தம் எனக்கு ஏனோ
மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அதுவல்ல உண்மையான் நட்பு என்பது எனக்கு அப்போது தெரியவில்லை.

இப்படியான வாழ்க்கை கொடுத்த அனுபவங்கள் இருந்து என் பிற்காலத்திலே
நட்பின் பெயரில் என்னை மோசடி செய்தவர்களிடம் ஏமாந்திருக்கிறேன் என்று
எண்ணும் போது, அனுபவம் ஏன் எனக்கு கை கொடுக்கவில்லை என்று எண்ணுகிறேன்.

என்னை ஏமாற்றியது அந்நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களின் கயமையா?
இல்லை எனது மூடத்தனமா?

காதலுக்குக் கண்ணில்லை என்ரு சொல்வார்கள் ஆனால் நட்புக்குக் கூட
கண்ணில்லாமல் போய்விடுமா?

கரும்பலகையில் எழுதியதை அழித்துவிடலாம் ஆனால் மனப்பலகையில்
எழுதியதை ….. ?

________________________________________________________________________

 

 

 

யுத்தம் 3

உள்ளத்தின் அடித்தளத்தில் ஈனமாய்க் கேட்கிறதே ஒரு குரல். ஓ! அதுதான்
உண்மையோ ? அது ஏன் இப்படி ஈனஸ்வரத்தில் முனகுகிறது ? உண்மைகள் அப்படியே
உருமாறாமல், உதடுகளின் வழியே வெளிவந்து விட்டால் எத்தனை உள்ளங்களைச்
சிதைத்து விடுமோ?

என்ன ? எதைப்பற்றி பேசுவதற்கு இவன் இந்தப் பீடிகை போடுகிறான் என்று
எண்ணுகிறீர்களா?
பெரிதாக ஒன்றுமில்லை ஆனால் இந்த உலகில் உண்மைகள் பேசப்படுவதற்கு எத்தனை
தடைகள் இருக்கின்றன என்று எண்ணிப்பார்க்கிறேன். அரிச்சந்திர மகாராஜாவின்
கதையைக் கூறி உண்மையின் விலையை அழகாக உணர்த்துகிறது எமது புராணம். ஆனால்
இந்த நூற்றாண்டிலே, இத்தகைய அவசரக் காலகட்டத்திலே, தன்னலம் மிகுந்த
சமுதாய அமைப்பிலே உண்மையை மட்டும் பேசிக் கொண்டிருப்பவர்களால் எத்தகைய
வாழ்க்கையை வாழ்ந்து விட முடிகிறது ?
ஆனாலும் உண்மையின் கூக்குரலை, உண்மையின் அரிச்சலை எமது மனங்களின்
அடித்தளத்தில் இருந்து அறவே அகற்றிவிட முடிந்து விடுகிறதா? இல்லையே.

உண்மை என்பது ஒரு குத்தூசி
உள்ளத்தில் குத்தியெமை
பொய்மையெனும் தூக்கத்தினின்றும்
பொழுதோடு விடியவைக்கிறது
உள்ளத்திற்கு உண்மையாக
உலகத்திற்கு பயனுள்ளவராக
ஒருமுறை வாழ்ந்துவிடு
நீ மிதித்த மண்ணை நான்
முத்தமிடுகிறேன் தோழா !

இன்றும் என் மனதில் அழியாத நிகழ்வாக ஒன்று தடம் பதித்து நிற்கிறது.
அப்போது எனக்கு வயது பத்திருக்கும். அப்போது யாழ்ப்பாணம் பரியோவான்
கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தேன். சாரணர் இயக்கம் அதாவது
ஆங்கிலத்தில் SCOUT ORGANISATION என்று சொல்லுவார்கள். நீங்கள்
கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் மணவர்களுக்கான கிளையை ” மாணவர் சாரணர்
இயக்கம் அல்லது ஆங்கிலத்தில் CUB SCOUTS ” என்று சொல்லுவார்கள்.

அந்த மணவர் சாரணர் இயக்கத்தில் நான் ஒரு அங்கத்தினனாக இருந்தேன். நான்
அப்போது மிகுந்த பயந்த சுபாவம் உடையவன். அன்னை, தந்தை என்னும்
வட்டத்துக்குள்ளே மட்டும் ஆடிப்பாடித் திரிபவன். இல்லத்தில் இருந்து
பாடசாலை செல்வதற்கும், திரும்புவதற்கும் எனது பெற்றோர் வாடகைக்கார்
ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்து எப்படி என்றால்,  வாடகைக்கார் பாடசாலை ஓட்டம் காலையிலும்,
மாலையிலும் நடத்தும். ஒரே தடவையில் ஏறத்தாழ பதினைந்து மாணவர்களை(சிறுவர்,
சிறுமியரை) அடைத்துக் கொண்டு செல்லும். அப்படியான ஒரு வாடகைக்காரில் தான்
நானும் செல்வேன்.

ஒருநாள் மாலையில் எனக்கு பாடசாலை முடிந்ததும் அந்த மாணவர் சாரணர் இயக்கக்
கூட்டம் இருந்தது. ஆகையால் மாலை 5 மணியளவில் தான் நான் வருவேன் என அந்தக்
கார்ச்சாரதியிடம் சொல்லியிருந்தேன்.

மாலை ஜந்து மணிக்கு பாடசாலையின் முன்னால் காருக்காகக் காத்திருந்தேன்.
கார் வரவில்லை, மணியோ ஜந்து மணி இருபது நிமிடமாகியிருந்தது. மனம்
பயத்தினால் அடித்துக் கொள்லத் தொடங்கியது. முன்னால் ஒரு கைவிளக்கு
வண்டிக்காரன் பட்டாணி சுண்டல் விற்றுக் கொண்டிருந்தவன், அவனும் தனது
வியாபாரத்தை முடித்துக்கொண்டு கிளம்பினான். அதுவரை அவனது துணிவில் அங்கே
நின்றிருந்த நான் பயத்தின் மிகுதியினால் மெதுவாக அவனைன் பின்னால் நடக்கத்
தொடங்கினேன், அந்தச் சமயம் எனது கார்ச்சாரதி என்னைத் தேடி வந்திருக்க
வேண்டும், தான் தாமதமாக வந்ததை மறைப்பதற்காய், அவனோ நான் அந்த பட்டாணிச்
சுண்டல்காரனின் பின்னால் நடந்து போனேன் அதனால்தான், என்னைக்
கண்டுபிடிப்பதற்கு அவனுக்குத் தாமதமாகியது என்றே சாதித்தான்.

அப்படியே சென்று என் தாயாரிடமும் அதை ஒப்புவித்தான். அதைக் கேட்ட தாயார்
அவனையே நம்பத் தலைப்பட்டார், அதன் நிலைப்பாடாக எனது சாரணர் இயக்க ஈடுபாடு
நிறுத்தப்பட்டது.

என்னை அந்தச் சாரணர் இயக்கத்தில் ஈடுபடாது தாயார் நிறுத்த வேறு காரணம்
இருந்தது. பாடசாலையில் ஒழுங்காகப் படிக்காமல் நண்பர்களுடன் அலைந்து
திரிந்த எனது சகோதரர், படிப்பின் மீது இருந்த ஆர்வத்தைக் கைவிடக் கரணமாக
இருந்தது அந்தச் சாரணர் இயக்கமே என்று எனது தாயாருக்கு பல”பெரிய”
மனிதர்கள் ஓதிய காரணத்தால், நானும் அவ்வழி போய்விடுவேனோ என அஞ்சிய
தாயாருக்கு இந்தக் கார்ச்சாரதியின் பேச்சு மேலும் அச்சத்தை அதிகமாக்கி
விட்டது.

அப்போதுதான் நான் சொன்ன உண்மை எடுபடாமல் போனது எனது நெஞ்சில்
ஆழப்பதிந்தது. இது மிகவும் ஒரு சாதாரண விடயம். ஆனால் இதை நான்
குறிப்பிடுவதன் காரணம், உண்மையின் கனம் அது யார் வாயில் இருந்து வருகிறது
என்பதைப் பொறுத்தேயுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டவே.

ஆனால் இத்தாக்கம் என்னை உண்மை பேசுவதில் இருந்து நீக்கி வைக்கவில்லை.
ஆனால் உண்மை பேசுகிறோம் என்பது மட்டும் ஒரு பலம் அல்ல, அந்த உண்மை
நம்பப்பட வேண்டுமானால், அதற்குரிய இடத்தில் இருந்து பேசவேண்டியதின்
அவசியத்தை எனக்கு உணர்த்தியது.

கண்மூடித்தனமாக உண்மைதான் பேசுவேன் என்று கூறி , சொல்லப்போகும் அந்த
விடயத்தினால் எதுவித நன்மையுமின்றிப் பலரின் மனம் புண்ணணாகக்கூடிய
விடயத்தைச் சொல்லுவது எந்தவிதத்திலும் தர்மமாகாது. அதற்காக பொய்
பேசவேண்டும் என்பதல்ல என் கருத்து, ஆனால் ஒரு உண்மை பேசப்படுவதானால் பல
பாதகங்கள் ஏற்படலாம் என்று அறிந்திருக்கும் வேளையில் அதைப் பேசாது
விடுவது நன்மைபய்க்குமெனில் அதுவே சமோசிதமானது என்றே கூறுவேன்.

மனசாட்சியெனும் தராசில் உண்மையின் எடைக்குச் சமனாக வேறு எதுவுமே
இருக்கமுடியாது. உண்மை உதடுகளை உரசிக்கொண்டு வெளியே வராமல் இருப்பினும்,
உள்ளத்துக்கு ஒளிவில்லாமல் வாழ்ந்து விட்டால் அதுகூடச் சிறந்த
வாழ்க்கையே.

மனத்தைக் கோவிலாகவும், அங்கு உண்மையைத் தெய்வமாகவும் கொண்டு வாழ்ந்தால்
வேறு எந்த தெய்வமுமோ அன்றி எந்த மதமுமோ ஒரு மனிதனுக்குத் தேவையில்லை.

ஆக மொத்தம் இங்கே என்ன சொல்ல விரும்புகிறேன்.

உண்மை பேசுங்கள். மற்றவர்கள் பேசுபவற்றில் உண்மையைத் தேடுங்கள்.

ஆனால் நீங்கள் பேசப்போகும் உண்மை யாருக்கும் எதுவிதமான நன்மையும்
பயக்காமல், பலரைப் பாதிக்கப் போகிறது என்பது தெரிந்தும், உங்களை மட்டும்
ஒரு உண்மை பேசுபவனாக காட்டிக்கொள்ள விரும்பி ஒன்றைப்பேசுவதை விடுத்து
அவ்விடத்தில் மெளனம் காத்திடுங்கள்.

ஏனென்றால் சமயத்தில் அந்த மெளனத்தின் மூலம் எத்தனையோ உயிர்களைக்
காத்திடக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கிறது.

இது புத்திமதி அல்ல. அறிவுரை அல்ல . இந்த அண்ணனின் அனுபவம்.

 

 

 

_____________________________________________________________________________

யுத்தம் 4

———–
சத்தமில்லாமலே நடந்து கொண்டிருக்கும் இந்த யுத்தம். யுத்தங்களின் ரணங்கள்
கொடுத்த தடங்கள் காலத்தின் வேகத்தோடு காணாமல் போகாமல் மனதினுள்ளே மிதந்து
கொண்டிருக்கும் அனுபவங்கள்.
ஆம் இளமையின் இஅர்த்தம் கொடுக்கும் துடிப்பு இனிமையின் கானங்களை மட்டுமே
செவிகள் உணரக்கூடிய தன்மையைக் கொடுக்கின்றன. உண்மையின் கசப்புக்களை
புதைகுழிக்குள் போட்டு புதைத்துவிடத் துடிக்கின்றது.

அன்னை, தந்தை அனுபவம் மிக்க பெரியோர் என்போர் சொல்லும் அறிவுரைகள் காதிலே
விழாமல் போகும் பருவம். ஆனால் அந்தப்பருவம் கொடுத்த நௌபவன்fகள் மட்டும்
வாழ்க்கையில் ஆழப்பதிந்து விடுகிறது. அடிமனதில் அவைகளை அசைப்போட்டுப்
பார்க்கும் போது, மீண்டுமொருமுரை அந்தப்பருவத்திர்கு பறந்துசென்று அந்த
நுபவமிக்க பெரியவர்களின் அறிவுரைகளின்படி வாழ்ந்துபார்த்துவிட மனது
துடிக்கிறது.

ஆனால் முடியாதே! இந்த வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் ஒருமுறை தான்
கொடுக்கப்படும் பரிசு. அதைப் பாதுகாப்பதும், சிதைப்பதும் அவரவர்
கைகளிலேதான் உள்ளது. அன்னை, தந்தை மற்றும் உறவுகள் கொடுக்கும் உதவிகள்
ஒரு எல்லைக்குள் தான் இருக்கும். ஆனால் தனது வாழ்க்கையை மேம்படுத்திக்
கொள்ள ஒவ்வொருவரும் தமக்குத்தாமே போட்டுக்கொள்ளும் வலயம் அவர்களையே
சார்ந்தது.

எனக்கு இறைவன் கொடுத்த வாழ்க்கையின் இளம்பிராயத்தை நான் சரிவர
நிர்வாகிக்கதாதினால் நான் எனது தாய்மண்ணை விட்டுப் பிரிய நேர்ந்தது.

ஆனால் அந்தப் பிரிவின் மூலம் நானடைந்த சொந்தங்கள் அளப்பரியாதனவாக
இருந்தாலும், அந்த இளம் பருவத்திலே தாய்மண் என்னும் பாதுகாப்பு வலயத்தை
விட்டு வெளியே வரும்போது இதயத்தைப் பிழியும் உணர்வுகள் எண்ணிலடங்கா.

ஆனால் அதற்காக இளம் விடலைகள் அனைவரும் முதுமையான ஞானத்துடன் நடக்க
வேண்டும் என்பதல்ல எனது கருத்து, அந்தந்த வயதுகளுக்குரிய விளையாட்டுக்களை
விளையாடுவது தவிர்க்க முடியாதது, ஆனால் அந்தந்தப் பருவத்தில் நீங்கள்
அடையவேண்டிய இலக்குகளைத் தவற விட்டுக் கொண்டு விளையாட்டில் மட்டும்
ஈடுபட்டுக் கொண்டிருப்பதுதான் தவறு.

என்னுடன் இருந்த மிகவும் நெருக்கமான நண்பன் ஒருவனைப்யும், என்னையும்
எடுத்துக் கொள்ளுங்கள். நாமிருவரும், மற்ரைய நண்பர்களுடன் சேர்ந்து
அந்தப் பதினைந்து, பதினாறு வயது மாணவர்களுக்கான சேஷ்டைகளை விடத்
தவறவில்லை. சிகரெட் பிடித்தோம், சகவயதுத் தொழியரின் பின் “அமைதிப்படையாக”
அணிவந்தோம். ஆனால் எமது விளையாட்டுக்கள் கண்னியம் என்னும்
கட்டுப்பாட்டுக்குள் தானிருந்தன.

நானோ அந்த விளையாட்டுக்களைப் பெரிதாக எண்ணி, பள்லிப்படிப்பை
இரண்டாந்தரமாக்கினேன், ஆனால் அந்த நண்பனோ இந்த விளையாட்டுக்களுடன் தனது
படிப்பயும் அதே முக்கியத்துவத்துடன் கவனித்துக் கொண்டான்.

விளைவு.

பதினெட்டு வயதிலே நான் தாய்மண்ணைப் பிரிந்து லண்டன் வந்தேன், ஆனால் என்
நண்பனோ ” கணகியல்” துறையில் இரண்டு பட்டங்களைப் ( Double Accountant)
பெற்று பின் அதன் வலுவுடன் லண்டன் வந்தான்.

இன்றும் எமக்கிடையே இருக்கும் அதே நட்பு அதே தூய்மையுடன், ஆதே ஆழத்துடன்
தானிருக்கிறது. ஆனால் இளவய்தில் கொஞ்சம் கவனம் திசை திரும்பினாலும் அது
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்துகிறது எனதைப்
புரியவைக்கவே, என் இளம் தம்பி தங்கையருக்கு இதைக் கூறுகிறேன்.

அன்பையே பொழிந்து கேட்டதையெல்லாம் எனக்குக் கொடுத்த அந்த அன்பு அன்னை,
தந்தையருக்கு நான் கொடுக்காத பெருமையை என் நண்பன் தன் அன்னைக்குக்
கொடுத்தான்.

இது அறிவுரையல்ல இந்த அண்ணனின் அனுபவம்

அன்புடன்

சக்தி
______________________________________________________________________________

யுத்தம் 5

மனதினுள் சத்தம் அடங்கி, யுத்தம் ஓய்ந்து ஒருவிதமான சோகத்துடன் கூடிய
அமைதி நிலவுகிறது. ஆமாம் இந்த யுத்தத்தின் சத்தம் கொஞ்சம் வழமையான
திசையினின்றும் விலகி ஓடுகிறது.

ஒருமரத்தில் வெவ்வேறு கிளைகளில் வாழ்ந்த ஒரு பெரிய கிளிக் குடும்பம்.
அதிலே இரண்டு ஒத்த வயதுடையவை ஒன்றாக பாடிப் பறந்து களித்திருந்தன.
காலத்தின் கோலங்கள் அவை வெவ்வேறு திசை நோக்கிப் பறந்தன. இரண்டு கிளிகளும்
தமக்கென வாழ்க்கையை அமைத்துக் கொண்டன. அவைகளின் மனங்களின் மற்ரக்
கிளியும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்னும் நினைப்பு அடி
மனதில் இருந்து கொண்டு தானிருந்தது.

ஆனால் ஒருநாள் ஒரு கிளி  உயிர்துறந்தது என்று கேள்வியுற்றதும் தான்
மற்றைய கிளியின் இதயத்தின் சுவர்களை சோகம் நன்றாக உராய்வது புரிந்தது.

இதுநாள் வரை முகிலினுள் மறைந்திருந்த ஆதவன் கீழே விழுந்து ஒரேயடியாக
மறைந்து போய்விட்டது போன்றதோர் உணர்வு நெஞ்சத்தைக் கவ்விப் பிடித்தது.

என்னை இது அவன் என்ன கதை சொல்கிரான் என்று பார்க்கிறீர்களா? சமீபத்தில்
இவ்வுலகை விட்டு மறைந்த என் மைத்துனன் ரட்ணதாசுக்கும், எனக்குமுள்ள
உறவைக் கொஞ்சம் புரட்டிப்பார்க்கிறேன். என் இதயத்துள் நடக்கும்
யுத்தங்களின் சத்தத்தில் இதுகூட கொஞ்சம் பலமாகத்தான் கேட்கிறது.

என் தந்தையின் இளைய சகோதரியின் ஜந்து புதல்வர்களுள், மூன்ராவதாக வந்தவன்
ரட்ணதாஸ். நான் பிரந்த அதே அண்டு ஆனால் ஜந்து மாதங்களுக்கு முன்பாக
பூமியிலே விழுந்தவன்.

ரட்ணதாஸ் எனப்பெயர் கொண்ட வனை வீட்டிலே “தாஸ்” என்றழைத்தது போலவே,
சக்திதாசன் என்ற என்னையும் வீட்டிலே “தாஸ்” என்றே அழைத்தார்கள். எனது
குடும்பத்தினருக்கும், பால்ய நண்பர்களுக்கும் நான் இன்று மட்டும் “தாஸ்”
தான்.

எனது அத்தை, மாமா குடும்பம் தலைநகர் கொழும்பிலேயே வாழ்ந்து வந்தது. நான்
அவர்களைச் சந்திப்பது அநேகமாகக் கோடை விடுமுறைகளிலேயே. இது எப்போதும்,
ஈழத்தில் நாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற நல்லூர் ஆலயக் கந்தன் வருடாந்த
உற்சவத்தின் போது சேர்ந்தே வரும். அப்போது எனது அத்தையும், பிளைகளும்
யாழ்ப்பாணம் வருவது வழக்கம். நாம் நல்லூரிலும், அவர்கள் கந்தர்மடத்திலும்
இருப்போம். ஆனால் அத்தையின் பிள்ளைகள் எம்முடன் வந்து தங்குவார்கள்.

அப்போது நானும் ரட்ணதாசும் ஒன்றாகச் சேர்ந்து ஓடியாடுவோம். அந்த நாள்
காட்சிகள் எனது மனதில் இன்றும் பசுமையாக ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
அவனின் நினைவுகளில் இன்றும் என் மனதில் அழியாமல் பதிந்திருப்பது அவனது
கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்பேயாகும்.

எனது இளவயதிலேயே நான் லண்டனுக்கு புலம் பெயர்ந்த காரணத்தால் அவனுடன்
வாலிபப் பருவத்தில் ஒன்றாகக் கூடிப்பழகும் வாய்ப்பு எனக்குக்
கிட்டவில்லை.

யாழ்ப்பாணத்தில் பிரச்சனைகள் மிலுந்த ஒரு காலகட்டத்திலே அங்கே தனியக
இருந்த எனது பெற்றோரை நான் கொழும்பில் குடியமர்த்தினேன். யாழ்ப்பாணத்தில்
பெரியதோர் வீட்டிலே வசதியாக வாழ்ந்த அவர்கள், கொழும்பிலே ஒரு சிறிய
அறையிலே வாடகைக்கு ச்வாழ்வேண்டிய நிர்ப்பந்தத்துக்குளானார்கள்.

அப்போது அங்கே அவர்களுக்கு பெருந்துணையாக இருந்தவன் ரட்ணதாஸ். எனது
தந்தைவழி உறவுகளோடு அதிகம் ஈடுபாடு கொள்ள விரும்பாத என் அன்னையின் மனதில்
கூட ஒரு பெரிய இடத்தை வகித்த வெள்ளை உள்ளம் படைத்தவன் ரட்ணதாஸ்.

இன்றுகூட எனக்கு நன்றாக ஞாப்கம் இருக்கிறது, கொழும்பு வாழ்க்கையைத்
தொடர்ந்து நான் எனது பெற்றோரை லண்டனுக்கு அழைத்துக் கொண்டேன்.
அப்போதுதான் ரட்ணதாஸ¤க்குத் திருமணம் நடந்தது. திருமண்ம் குடிந்ததும்
எமக்கு எழுதிய கடிதத்தில். அதிலே ” உருவத்தை  அழ்கை விட என் மனைவி கொள்ளை
உள்ளத்து அழகு கொண்டவள்” என்று எழுதியிருந்தான்.

1978ம் ஆண்டுக்குப் பின்னால் இதுவரை ஈழத்துக்கு போகச் சந்தர்ப்பம்
கிடைக்காத என்னால் சமீபத்தில் அவனை சந்திக்க முடியாமல் போனதே மனதின் ஆறாத
துயரமாக இருக்கிறது.

எனது தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். இன்ரு அவருடனே
சென்று ஜக்கியமாகிவிட்டான்.

எமது உள்ளம் இருக்கிறதே அது மிகவும் விசித்திரமானது. இருக்கும் போது ஏனோ
நினைக்க மறந்து விடுகிறது. இல்லையென்றான போது அதற்காக ஏங்கித்
துடிக்கிறது.

வாழ்க்கையில் பலரோடு எத்தனையோ சமயங்களில் கருத்து பேதம் ஏற்படுகிறது. இது
பலசமயங்களில் உறவினர்க்களுக்கிடையில் கூட இருக்கலாம். ஆனால் இது எமது
வாழ்க்கை என்னும் கால ஓட்டத்தில் ஒரு சிறிய துளியே என்பதைப் பலரும்
எண்ணிப்பார்க்கத் தவறி விடுகிறோம்.

இன்றிருப்போர் நாளை இருப்பரோ என்னும் எண்ணம் ஏனோ கர்வம் என்னும் மாயைக்கு
முன்னால் தலைமறைவாகி விடுகிறது.

“இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான் – அதை
 இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான் ” என்னும் கவியரசரின்
தனிப்பெரும் வரிகள் தரும் அர்த்தங்கள் ஏனோ தேவையான நேரத்தில்
புலப்படுவதில்லை.

நிலையான வாழ்வு இது என்று கண்ணை மூடிக் கொண்டு கடுகதி வேகத்தில்
ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு நெருக்கமான ஒருவரின் இழப்பு விழிப்புணர்வை
ஏற்படுத்துகிறது.

ஜனனம் என்னும் வரவில் தொடங்கி மரணம் என்னும் செலவுவரை வாழ்க்கை முழுவதுமே
ஒரு கூட்டல் கழித்தல் கணக்காகவே முடிகிறது. எம்மையறியாமல் நாம் என்னும்
அக்கங்காரம் எமக்குள்ளே பலசமயங்களில் தலைதூக்குகிறது, ஆனால் அவ்வப்போது
அனவர்க்கும் பொதுவான் அந்த இரை என்னும் சக்தி தலையில் ஒரு தட்டுத் தட்டி
எம்மைச் சமநிலைப்படுத்துகிறது.

நான் கூறியவைகள் ஏதோ விளக்கமற்ற வியாபனங்கள் போலத் தென்படலாம், ஏற்கனவே
மற்றையோர் கூறியவர்றின் மறுபதிப்புப் போலத் தென்படலாம்,
புத்திபேதலித்தவனின் புலம்பல் போலத் தோன்றலாம்.#

ஆனால் மனட்சாட்சியின் முன்னால் உண்மையை மருக்கும் திரணி எவருக்குமே இல்லை
என்றே கூறுவேன். அப்படியான ஒரு உண்மையை அலசும் போது ஒரு வினாடியாவது
உள்ளங்களில் இவற்றின் விளக்கத்தின் உண்மை புரியும்.

என்னுள்ளம் என்னோடு போட்டும் யுத்தங்களில் இருந்து வெடிக்கும் சத்தங்களே
இவை. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக இந்தத் தடவை என் மைத்துனனின் மரணம்
என் நெஞ்சில் பத்தித்த தடங்களை தடவிப் பார்த்ததினால் எழுந்த ஓலங்களை
வார்த்தைகளாய் வடித்திருக்கிறேன்

மீண்டும் வருவேன்

அன்புடன்
சக்தி
_____________________________________________________________________________

 

சத்தமுமில்லை யுத்தமுமில்லை ——-6
இன்று காலையிலிருந்து இலண்டன் தெருக்களிலே ஆரவாரம். சூப்பர்
மார்க்கெட்டுக்கள், பெற்றோல்     நிலையங்கள், பேப்பர் கடைகள் அனைத்திலும்
மலர்க் கொத்துகளும், வாழ்த்து அட்டைகளும் காற்றுப்  போகும் வேகத்தில்
விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

ஏன் என்ன விசேடம் என்று கேட்கிறீர்களா ? இன்றுதான் இங்கிலாந்தில்
அன்னையர் தினம்         கொண்டாடுகிறார்கள். தமது அன்னையைப் பார்ப்பதற்காக
அவருக்கு மலர்க் கொத்தும், பரிசுகளும்      வாங்கிச் செல்வோர்கள்
ஒருபுறம், அவருடன் உணவு விடுதிக்குச் சென்று உணவருந்தி மகிழ்பவர்கள்
ஒருபுறம் என்று இந்தச் சமுதாயம் அல்லகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும்
காட்சியைக் கண்ணுற்றவாறே நான் இன்று ஆபிஸ¤க்குச் சென்றேன்.

என் மனதினுள்ளும் சத்தமில்லாமல் ஒரு யுத்தம் நிகழ்ந்து
கொண்டுதானிருக்கிறது. ஆமாம் என்   அன்னையின் நினைவுகளடு சிக்கிச்
சுழன்றாடி தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் திணறுகின்ற என மனவலைகள்
போடும் யுத்தத்தின் சத்தம் எனக்குள்ளேயே உருவாகி எனக்குள்ளேயே
சமாதியாகி    விடுகிறது.

எனது அன்னையின் கனிவான பொட்டு வைத்த வட்ட முகம் என் மனக்கண்ணில் இன்றும்
வண்ணப்படமாக, கல்லில் வரைந்த பொற்சித்திரமாக பூத்துப் போயிருக்கிறது..

சிறு வயதிலேயே பெற்றோரை பறி கொடுத்து தன் சகோதரரின் தயவிலே வாழ்ந்து வந்த
அவளது    மனநிலையை எண்ணிப்பார்க்கிறேன். வாழ்க்கையிலே ஒரு வலுவான
வாக்கியம் எல்லோருக்கும் பொருந்தக் கூடியது. அதாவது,

“விரும்பிப் போனால் விகைப் போகும், விலகிப் போனால் விரும்பி வரும்”

இது பல விடயங்களைப் பொறுத்தவரை ஒரு சரியான வாக்கியமாகும். என்னுடைய
மனதில் ஓடும்       நினைவலைகளுக்கும் இந்த வாக்கியத்துக்கும் என்ன
சம்பந்தம் என நீங்கள் வியப்புடன் நோக்குவது எனக்குப் புரிகிறது.

ஒரு பொருள் எமது கையில் இருக்கும் போது அதனுடைய அருமை எமக்குப்
புரிவதில்லை, அது இல்லை என்றாகி விடும்போது அதனை நினைத்து மனம்
வெம்புகிறது. காலகாலமாக மனிதர்களின் நிலைப்பாடு இப்படித்தான் இருந்து
வந்திருக்கிறது.

அது போலத்தான் எனது தாய் எனதருகே இருந்து எனது தேவைகளைக் கவனித்து வரும்
போது, ஏதோ இந்த உலகம் இருக்கும் வரையும் அவள் என்னுடனே இருந்து விடுவாள்
என்னும் பாணியில் நான் நடந்து கொண்டிருந்தேனோ ? இளவயதில் வாலிபப்
பருவத்தில் அந்த பருவத்து நினைவுகள் நெஞ்சை      ஆக்கிரமித்திருக்கும்
போது அன்னையின் அருமை நெஞ்சுக்குப் புலப்படமாட்டாது, பின்பு அவளை காலம்
நம்பிடமிருந்து பறித்துக் கொண்டு போகும் போது நெஞ்சு பதைபதைக்கிறது.

கையிலிருந்த பொருளை தொலைத்து விட்டால் அதே போல வேறொன்றை வாங்கிக்
கொள்ளலாம்  ஆனால் அதே எமது அன்னை போன்ற ஒரு அரும் பெரும் தெய்வமாக
இருந்தால் அவரை எங்கே போய் வாங்க முடியும் ?

திருமணத்துக்கு முன்னே தனது பெற்றோரின் ஆதரவு கிடைக்காதவள், திருமணத்தின்
பின்னே திருமண பந்தம் கொடுத்த உறவுகளின் அழுத்ததுக்குள் அழுந்தியவள்,
ஆமாம் என் அன்னையைப் போன்றவர்கள் அந்தக் காலகட்டத்திலே வாழ்க்கையில் எதை
எதிர்பார்த்து இருந்திருப்பார்கள்? இன்றிரவு           தொலைக்காட்சியில்
“கல்கி” சீரியலில் கல்கிக்கு என்ன நடக்கப் போகிறது? என்ற பதை
பதைப்பில்     வாழ்ந்திருப்பாளா? இல்லை வரும் விடுமுறை நாட்களில்
கணவனுடனும், குழந்தைகளுடனும் கோடைகால விடுமுறையைக் குதூகலமாகக் கழிக்கப்
போகின்றோம் என்ற எண்ணத்தில் வாழ்ந்திருப்பாளா?

தன் மனதின் ஏக்கங்களை மூட்டையாகக் கட்டி வைத்து விட்டு, இந்த பிள்ளைச்
செல்வங்களின்        வாழ்கையின் முன்னேற்றத்திலே ஒரு மகிழ்ச்சியைக்
காண்போம் என்னும் ஒரேயரு எதிர்பார்ப்புத்தான் அவளுக்கு ஆறுதலாக
இருந்திருக்கும்.

ஜயகோ அந்ததாயின் அந்த அழகான குருவிக்கூட்டிலிருந்து ஒவ்வொரு பறவையாக
வெளியே பறந்து போய் விட்டோமே, அதையும் கூட அந்தத் தெய்வம் புன்னகையுடன்
ஏற்றுக் கொண்டது. என் செல்வங்கள் தானே நான் ஈழத்தில் இந்தச் சிக்கல்
நிறந்த வாழ்க்கைச் சூழலுக்குள் சிக்கித் தவிப்பதைப் போலல்லாமல்
அவர்களாவது வெளிநாடுகளில் நன்றாக வாழட்டும் என்னும் எண்ணத்தில் அவள்
நெஞ்சம் மகிழ்ச்சியைக் கண்டது.

ஆனால் எனது சொந்தங்களோ தம்மைச் சுற்றித் தன்னலம் என்னும் வட்டத்தைப்
போட்டு விட்டு,        வான்கோழி போன்றதோர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு
இதுதான் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள்.

எனது அன்னையின் தியாகங்கள் ஒவ்வொன்றாய் நான் எண்ணிப்பார்க்கிறேன். எனது
பெற்றோரின்       தியாகத்திற்கு முனனல் நான் எனது குழந்தைகளுக்குச்
செய்வது ஆழியையும், மழைத்துளியையும் ஒப்பிடுவது போலாகும்.

இந்தக்காலத்துச் சூழல்கள் பெற்றோருக்கு ஒரு வசதியான வாழ்க்கையை அளித்துக்
கொண்டு பிள்ளைகளைப் பராமரிக்க ஏதுவாக இருக்கிறது. ஆனால் என் அன்னையின்
சூழல்கள் அவளுக்குக் கொடுத்த பரிசுகளோ வேறு..

காதல் மணம் புரிந்து கொண்டேன், மனம் மகிழ்ந்து வாழ்த்தினாள். எனது
மனைவியின் அன்பு மனதைக் கண்டதும் ” நாம் எங்கே தேடியிருந்தாலும் இப்படி
ஒரு மருமகளைப் பெற்றிருக்க முடியாது” என்று    மகிழ்ந்தாள். அந்த
அன்னையின் வாஞ்சையில் நான் தோய்ந்த நாட்கள் தான் எத்தனை?

எத்தனை முறை பிறப்பெடுத்து நான் அவளுக்கு மகனாக பிறந்தாலும் அந்த அன்புத்
தெய்வத்தின்        நன்றிக் கடனை அடைக்க முடியுமா?

இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் அவளின் கடைசிக் காலங்களில் அவளை எனக்கருகே
கொண்டு வந்து நானும் என் மனைவியும் எம்மால் முடிந்தவரை அவர்களுக்கு
பணிவிடை செய்யக்கூடிய ஒரு பாக்கியம் ஒன்றேதான்.

எங்கள் வீட்டுப் பின்புறத்துத் தோட்டத்தில் அந்த ஈழத்துத் தாய் தனது
சேலைக்கு மேலாக கிரிக்கட்     பாட்ஸ் (PADS) போட்டு எனது மைந்தன் ( ஆறு
வயதாயிருக்கும் போது) ஆசைகிணங்க அணிந்து,   தொப்பியும் போட்டுக் கொண்டு
கிரிக்கெட் மட்டையைப் பிடித்து அவனுடன் கிரிக்கட் ஆடிய அந்தக்   காட்சி
இன்றும் என் மனதில் அப்படியே தெரிகிறது.

என் தாய் மறைந்து ஒன்பது வருடங்கள் ஓடி விட்டன. என் மனதிலோ அவளின்
நினைவுகள் , அவளின்  பாசம் இன்னும் பச்சைப் பசேலென குளிர்மையாக
படிந்திருக்கின்றன.

எனது சொந்தங்கள் இந்த அவசர வாழ்க்கையில் தமது அன்னையின் நினைவைத்
தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் போலும். பாவம் அவர்கள்
தேடட்டும்.

இந்த அன்னையர் தினத்தில் நெஞ்சில் எழுந்த என் அன்னையின் நினைவுகளை அசை
போட்டு பார்ப்பதில் நெஞ்சுக்குக் கொஞ்சம் நிம்மதி.

எழுத்து என்னும் இந்த ஓடை வழியாக எனது எண்ண ஊற்றுக்களை நதியாக்கிக்
காகிதத்தில் பாயவிட்டு எனக்குக் கிடைத்த அற்புத உறவுகள் உங்களோடு
பகிர்ந்து கொள்வது அனைவர்க்கும் பொதுவான ஆண்டவன் எனக்குக் கொடுத்த ஒரு
வரம்.

என் இளம் இதயங்களே ! வாழ்வில் அன்னை வகிக்கும் இடத்தை, அந்த அரியணையின்
வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. மறைந்த பின்பு பல ஆயிரம்
செலவிட்டு மாலை மரியாதை செய்வதை       விடுத்து அவர்கள் உயிருடன்
இருக்கும் போது அவர்களுக்கு அவர்களின் சிறப்பை, மகிமையை நீங்கள் உணர்ந்து
கொண்டுள்ளதை உணர்த்தி விடுங்கள்.

இந்த அண்ணணின் அனுபவம் உங்களின் பாதையில் உங்களுக்குத் துணைவரட்டும்.

“தாயை நேசிக்காத்வன் என்றுமே தாய் மொழியை நேசிக்க மாட்டான்”

அன்புடன்
சக்தி

 

______________________________________________________________________________

சத்தமுமில்லை யுத்தமுமில்லை ……. 7

நெஞ்சினில் ஒரு சோர்வு, கைகளில் ஒரு தயக்கம், மனதில் ஒரு மருட்சி.
எழுத்தாளர் சுஜாதா மறைவு கொடுத்த ஒரு தாக்கம் உள்ளின் ஓரங்களில் இலேசான
நெருடல்.

தமிழன்னையின் மடியில் தவழ்ந்து விளையாடிய இணையற்ற எழுத்து வித்தகர் தனது
விளையாட்டை முடித்து கண்மூடி ஆழத்தூங்கி விடுவார் என
எதிர்பார்க்கவேயில்லை.

மனிதர்கள் பிறப்பதும், பின் அவர்கள் இறப்பதும் சகஜமே என்றாலும், மனதில்
ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் மறைவு இந்த எழுத்துலகச் சிற்பியின்
வாழ்க்கையின் முடிவு.

சுஜாதா,அந்தப் பெயர்  தமிழ் இலக்கிய உலகில் இருந்து நீக்க முடியா, நீங்க
முடியா பெயர். ஒரு நான்கு சகாப்தமாக நீங்காது ஒலித்துக் கொண்டிருந்த
சிருங்கார ஒலி அமைதியாகி விட்டதா?

கைகளில் தவழும் நூல் சுஜாதாவின் நூலாக இருந்தால் கண்கள் உறக்கம் மறந்து
நூலின் கடைசிப் பக்கத்தைக் காணும் வரை தவிப்போடு பாய்ந்து பக்கங்களை
மேய்ந்து செல்லும்.

எழுத்துலகைத் தான் சார்ந்திருந்த காலத்தில், தன்னைச் சுற்றியுள்ள சமுதாய
மாற்றத்தை உள்வாங்கி அதனை உள்ளடக்கிய சமுதாய நாவல்களை எளிய முறையில்
அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஆக்கி அளித்த மாபெரும்
எழுத்தாளனின் சரித்திரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டதாகக் காலன்
எண்ணலாம், ஆனால் அவர் உடல் விதைக்கப்பட்டு அந்த விதையிலிருந்து இன்னும்
பல புதிய எழுத்தாளர்கள் புலர்வார்கள் என்பதுவே உண்மை.

அவர் மீது சாத்தப்பட்ட புகழ்மாலை என்றுமே வாடாத அதிசயமான மக்கள்
மனங்களின் அபிமானம் என்னும் மலர்களால் கோர்க்கப்பட்ட மாலை.

விஞ்ஞானத் துறையில் விற்பன்னனாகி தேர்தல் வாக்கிடும் முறையை
இயந்திரவியற்படுத்துவதில்       முன்னின்றவர். தமிழ் மீது கொண்ட
காதலினால் தன்னை எழுத்து உலகத்துக்கு ஈந்தவர்.

” ஸ்ரீரங்கத் தேவதைகளில் தொடங்கி சமீபத்துத் திரைப்படமான சிவாஜி ” வரை
தனது திறமையின் ஆளுமையை பறைசாற்றி நின்றவர்.

தமிழ் இலக்கிய உலகின் உலகின் வளர்ச்சி கணணி மூலமாகத்தான் தனது அடுத்த
கட்டத்தை அடையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.

“ஓரிரு எண்ணங்கள்” என்று “அம்பலம்” இணைய இதழில் தன் மனதின் எண்ண
ஓட்டங்களை வகைப்படுத்தி ஓட  விட்டவர். வளையும் விரல்களுக்குள்
விஞ்ஞானத்தையும் தமிழையும் கலந்து விந்தை பலபுரிந்து  தமிழன்னையை வியக்க
வைத்தவர்.

ஆம் சுஜாதா என்னும் பன்முக எழுத்தாளன் தனது உடலின்றும் விடைபெற்று
விடலாம் ஆனால் தமிழ் இலக்கிய உலகிடமிருந்தும், அவனது வாசக
உள்ளங்களிலிருந்தும் விடை பெற்று விட முடியாது.

இந்த எழுத்துலக நாயகனின் முதல் கதை 1953ம் ஆண்டு சிவாஜி பத்திரிகையில்
வெளிவந்ததைப் பற்றி அவரே ஒருமுறை ” சிவாஜி பத்திரிகையில் முதல் முறை
அந்தக்கதை வந்த போது அடைந்த சந்தோஷத்தை நான் மறுபடி பெறவில்லை. அந்த
சிவாஜி பத்திரிகைப் பிரதியை எனக்கு இப்போது யாராவது தேடிக்
கண்டுபிடித்துக்  கொடுத்தால், அவருக்கு என் ராஜ்யத்தில் பாதியைத் தருவேன்
” என்று      கூறியுள்ளார்.

இந்த அற்புத படைப்பாளர் “அம்பலம்” என்னும் இணைய இதழின் ஆசிரியர் என்பது
பலரும் அறிந்ததே. அம்பலத்தின் இரண்டாவது ஆண்டு விழாவிற்காக இவர் வழங்கிய
கட்டுரையின் தலைப்பு ” இணையத்தமிழரின் எதிர்காலம் ” அதில் அவர்
குறிப்பிட்ட ஒரேயரு வாசகம் அமட்டும் அவர் இணயத்தமிழில் கொண்டிருந்த அபார
நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

“இனி ஒவ்வொருவரும் பதினைந்து நிமிடங்களுக்கு பிரபல்யமடைவார்கள்” ( In the
future everyone will be famous for fifteen minutes). ஆமாம் ஆண்டி வார்
ஹால் ( Andy War Hall) அவர்களின் கூற்றை குறிப்பிட்டு இணையத்தின் மூலம்
சல;அருக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடிய ஒரு காலம் உருவாகிறது
என்பதில் இந்த அற்புத மனிதர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார் என்று
தெளிவுபடுத்தியிருக்கிறார்.

சுஜாதா என்னும் விளக்கின் ஒளி மறைந்து போயிருக்கலாம் அதன் மூலம் கமழ்ந்த
வாசம் தமிழ் இலக்கிய உலகம், சினிமா உலகம் அவ்ற்ரினிடையே இன்னும் ஆயிரம்
காலத்திர்கு கமழ்ந்து கொண்டிருக்கும் என்பதுவே தீர்க்கமான உண்மை.

என் மனதில் எழுந்த சத்தமில்லா யுத்தம் “சுஜாதா”, “சுஜாதா” என்று ஏனோ
கூவிக் கொண்டுதானிருக்கிறது.

அன்புடன்
சக்தி

______________________________________________________________________________

சத்தமுமில்லை யுத்தமுமில்லை 7
————————————————————-

சரிக்கும், பிழைக்கும் பயங்கரமான யுத்தம். ஆனால் சத்தமில்லாமல் தான்
நடந்து கொண்டிருந்தது. சரியைப் பார்த்துப் பிழை கேட்கிறது ” உன்னைச் சரி
என்று எந்த ஆதாரத்தை வைத்துக் கூறுகிறார்கள் ? ” சிரிக்கிறது சரி “
உன்னைப் பிழை என்று எந்த ஆதாரத்தை வைத்துக் கூறினார்களோ அதே ஆதாரத்தின்
அடிப்படியில் தான் என்னைச் சரி என்கிறார்கள் ” என்றது . ” உன்னைச் சரி
என்பதற்குக் கூட பிழைதான் ஆதாரமாகின்றது என்று கூறுகிறாயா ? மீண்டும்
பிழை.

யுத்தம் தொடர்கிறது. இன்று நேற்றல்ல உலகத்தின் ஆரம்பம் முதலே இந்த
யுத்தம் சத்தமில்லாமல் தொடர்ந்து கொண்டேதானிருக்கின்றது. இதன்
காரணத்தினால் சரிந்த சாம்பிராஜ்யங்கள் பல, சிதைந்த வாழ்வுகள் பல, அழிந்த
உயிர்கள் பல. மண்ணிலே மனிதன் தோன்றிய காலம் முதல் மண்ணிலே மனிதன் மறையும்
வரை சரிக்கும், பிழைக்கும் நடக்கும் இந்த யுத்தமே மனித வாழ்க்கையாகிறது.
இந்த வாழ்க்கையின் அடிப்படையில் தான் சிலர் மகாத்மாக்களாகிறார்கள் சிலர்
மிருகமாகிறார்கள் .

இந்த வாழ்க்கையின் இடையிலே இறைநம்பிக்கை என்ன இடத்தை வகிக்கிறது. சரியின்
பக்கத்தை வலுப்படுத்தி, பிழையைச் சரியின் பக்கம் சாய்ப்பதற்கு இந்த
இறைநம்பிக்கை உதவுகிறது என்பது ஒரு வாதம். ஈரைவன் இல்லை என்றே வைத்துக்
கொள்ளுவோம். சரி என்பதன் வழி நடப்பவரால் வாழ்வில் மனிதர்களுக்கு நன்மை
விளைகிறது என்று எடுத்துக் கொண்டால், பிழைவழி சார்ந்தவர்களைச் சரிவழி
கொண்டுவர உதவும் இறைநம்பிக்கை எப்படித் தவறாகும்.

இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பி அதன்பால் வெறி கொண்டு அந்த வெறியின்
அடிப்படையில் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதே ஏற்றுக்கொள்ளப்பட
முடியாதது.

ஆனால் இந்த வெறிக்கு இரைநம்பிக்கையை குற்றம் கூறமுடியாது. ஒரு மைந்தன்
தன் அன்னை மீது வைத்திருக்கும் பாசம் வெறொயாகி, அதன் நிமித்தம்
அவளைப்பற்றித் த்வறாக குறை கூறும் ஒருவரைக் கொலை செய்து விடுகிறான் என்று
உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அதற்காக அன்னை என்று ஷ்தானமே இல்லை,
அவன் வெறி கொண்டதிற்குக் காரணம் அன்னை  என்று கூற முடியுமா?

என் மனதில் என் வாழ்க்கையில் சிறுவயதில் நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்திர்கு
வருகிறது. அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும் நான் ஒரு தீவிர எம்.ஜி.ஆர்
ரசிகனாக இருந்தேன். அப்போது ஒருநாள் என் நெருங்கிய நண்பன் (சிவாஜி
ரசிகன்)  ஒருவனுக்கும் எனக்கும் விவாதம் ஏற்பட்டது, அந்த வயதுக்குரிய
முரண்டு குணத்தினால் நான் எம்.ஜி.ஆர் தான் சிறந்தவர் என்று அதற்குரிய
காரணங்களோடு அவனோடு விவாதித்தேன், அவனோ எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதைப்
போல் சொந்த வாழ்க்கையில் இல்லை என்ற ஒரு அடிப்படை வாதம் கொண்டு
விவாதித்தான்.

இதை அருகிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த என் தந்தையார், இருவரது
விவாதத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஒரு கருத்தைச்
சொன்னார். அதாவது எம்.ஜி.ஆர் தனது சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்
என்பதல்ல கேள்வி, சினிமாவில் அவர் எப்போதும் நல்ல கருத்துக்களையே
கூறுகிறார், எனவே சினிமா ரசிகர்கள் அவரின் சினிமாக் கருத்துக்களைக்
கேட்டு நல்வழி நடந்தால் அது நாட்டுக்குத்தான் நன்மை என்று கூறினார்.

அந்த நிகழ்வு கொடுத்த தாக்கம் இன்றும் என் மனதில் ஆழாமாகப் பதிந்து
போயுள்ளது. ஏறத்தாழ இறை நம்பிக்கையும் அது போலத்தான். இறைநம்பிக்கையால்
நல்வழி நடப்போரே எந்த மத்ததிலும் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.
சிறுபான்மையினரின் மடமைத்தனத்தினால் இரைநம்பிக்கையின் வலிமையை
உதறித்தள்ளிவிடமுடியாது.

ஆனால் ஒன்று மட்டும் மனிதாபிமான அடிப்படையில் நாம் மனதில் கொள்ளவேண்டும்,
எமது மதத்தில் அல்லது ஈரயில் நாம் எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளோமோ
அதேயளவு மற்றையோரும் தத்தமது மதங்களில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள்
என்று உணரவேண்டும். அனைத்து மதங்களையும் மதிக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.

மனிதனுக்கு மதம் அணிகலனே ஆடையல்ல. இறைநம்பிக்கை என்பது
நேர்மை,சத்தியம்,உளத்தூய்மை இவைகளின் வடிவமே.

அன்பு நண்பர்களே இது இறைநம்பிக்கைக்கான ஒரு அதரவு வாதமல்ல, என்னுள்ளதி
நசந்த சத்தமில்லா யுத்தத்தின் சத்தமே !.

இவையனைத்தும் ஏதோ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்துக்கள் என்ற பாணியில்
நானெழுதவில்லை, வழமை போல என் மனதில் துள்ளிய எண்ணங்கலை அன்பு
நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்ளூம் முயற்சியே

அன்புடன்
சக்தி
______________________________________________________________________________

சத்தமுமில்லை யுத்தமுமில்லை 8
————————————————————–

நெஞ்சத்தின் மூலையில் தூசு படிந்திருந்த வீணையத் துடைத்து இசை மீட்ட
முயன்றேன். ஜயகோ முதலில் பிறந்தது முஹாரி ராகமன்றோ !

இன்று மதியம் எனது மனைவியுடன் எனது தந்தையின் நெருங்கிய நண்பரைப்
பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன்.

எங்கே என்று கேட்கிறீர்களா?  வைத்தியசாலைக்கு.

ஆமாம், உடம்பு சுகவீனமுற்ற நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக குறைடன்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 எனது மனைவி இதுவரை அவைரை குறைந்தது மூன்று, நான்கு தடவைகளாவது சென்று
பார்த்து வந்து விட்டாள். அத்தோடு அவரின் உடல் நிலையைப் பற்றிய தகவல்களை
அழகாகச் சொல்லி வந்தாள்.

அதுமட்டுமல்ல, எனது மைந்தன் தனது மருத்துவக் கல்லூரியின் இறுதியாண்டு,
இறுதிப்பாக பயிற்சியை தற்போது இதே வைத்தியசாலையில் தான் மேற்கொண்டு
வருகிறான். அவன் தினமும் தான் வைத்தியசாலையை விட்டு கிளம்புமுன் அவரைச்
சென்று பார்த்து விட்டு வருவான்.

இவர்கள் இருவரும் அடிக்கடி சென்று பார்த்து விட்டு வருகிறார்கள் என்ற
காரணத்தினாலேயோ, அன்றி என் தந்தையின் நெருங்கிய நண்பரும், எமது குடும்ப
நண்பருமாகிய இந்த அன்பான மனிதரைச் சென்று பார்க்கும் போது எனது தந்தை,
தாய் ஆகியோர் வைத்தியசாலையில் இருந்த அந்தக் கடைசி நாட்களின் ஞாபகம்
மீண்டும் என்மனதில் தலைவிரித்தாடும் என்னும் பயத்தினாலேயோ தெரியவில்லை.
இன்றுவரை நான் அவரைச் சென்று பார்க்கவில்லை.

ஆனால் ஏதோ தெரியவில்லை நேற்றி இரவில் இருந்து என் நெஞ்சில் அவரைப்
பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் கரைபுரண்டோடியது. நேற்று இரவு நான்
வேலைக்குச் செல்ல வேண்டி இருந்தமையால் காலையில் என் மனைவியை என்னை மதியம்
தூக்கத்தால் எழுப்பி விடவும் ஏனெனில் நாம் இன்று அங்கிளைச் சென்று
பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டுத் தூங்கினேன்.

இன்று சனிக்கிழமையாதலால் எனது மனைவி கோவிலுக்குச் செல்வது வழக்கம், எனவே
நானும் அவளுடமன் கோவிலுக்குச் சென்று இறைவனிடம் அந்த நல்ல அன்பான
மனிதருக்காக பிரார்த்தித்து விட்டு வைத்தியசாலைக்குச் சென்றோம்.

அங்கே அவரை வைத்திருந்த அந்த வைத்தியசாலை வார்டுக்குள் நுழைந்ததும்
அவரைக் கட்டிலில் காணவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக நான் எனது மனைவியிடம்
” அங்கிளுக்கு குணமாகி வீடு திரும்பி விட்டார் போலிருக்கிறது ” என்று
சொன்னேன். என்னை நோக்கி ஒரு பரிதாபகரமான பார்வையை வீசி விட்டு, மனைவி
அந்தக் கட்டிலின் ஓரமாக இருந்த ஒரு கதிரையைச் சுட்டிக் காட்டினாள்.

அதிலே நான் கண்ட காட்சி, அடுத்த ஜந்து நிமிடங்களுக்கு என் வாயில் இருந்து
வார்த்தைகள் உதிராமல், கண்களிலிருந்து கண்ணீரை உகுக்க வைத்தது.

மிகவும் ஆணித்தர்மாக, தனது கருத்துக்களை அறுத்து, உறுத்து வாதிடும்
அங்கிள், எப்போதும் மிகவும் அழகாக தலைவாரி , ட்ரெஸ் பண்ணிக் காட்சி தரும்
அங்கிள், கலைந்த கேசத்துடன், கையில் செலைன் டியூப் புகுத்தப்பட்ட வண்ணம்
சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தார்.

ஒரு நிமிட நேரம், எனது அன்னை தனது கடைசிக் காலத்தில் வைத்தியசாலையில்
கொண்டிருந்த கோலத்தை எனக்கு நினைவூட்டியது. நெஞ்சு கனத்தது. அங்கிளுக்கா
இப்படி ? மனது கொஞ்சம் பதைத்தது.

அவர் இதுவரை நல்ல வாழ்க்கை தான் வாழ்ந்திருந்தார் . வயது இப்போது 92.
ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்வரை, தான் எவருடைய தயவிலும்
இருக்காது தனக்கென அரசாங்கம் கொடுத்த ஒரு ஃப்ளாட்டிலே வாழ்ந்து
கொண்டிருந்தவர்.

அதுமட்டுமல்ல,  ஈழத்திலேயிருந்து அங்கிருக்கும் இன்னல்களின் நிமித்தம்
இடம்பெயர்ந்து வந்திருக்கும் குடும்பத்தினரின் பிள்ளைகள் இங்குள்ள
பாடசாலைகளில் படிக்க உதவியாக அவர்களது ஆங்கில அறிவை உயர்த்தவும், மற்றும்
பாடங்களில் பயிற்சி கொடுக்கவும் அவர் அவர்களுக்கு படிப்பு இலவசமாகச்
சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

எனக்கு இப்போதும் நன்றாக ஞாபகத்திலிருக்கிறது, அப்போது 1985ம் ஆண்டு எனது
மைந்தனுக்கு ஒருவயது கூட ஆகவில்லை. ஈழத்தில் இருந்து அப்போதுதான்
லண்டனுக்கு வந்திருந்த எனது அக்கா, தனது மக்னை பள்ளியில் இருந்து அழைத்து
வருவதற்காகச் செல்லும் போது, எனது மைந்தனைத் தள்ளுவண்டியில் (Pram)
வைத்து தள்ளிக் கொண்டு செல்லுவாள். அப்போது இந்த அங்கிளும் தனது
பேரப்பிளையை அழைத்துச் செல்வதற்காக அங்கே சென்றிருப்பார். அவரை ஒவ்வொரு
நாளும் சந்திப்பதாலும், அவர் எனது மைந்தனிடம் விளையாட்டுக்
காட்டுவதாலும், எனது மைந்தன் அவரைக் கண்டதும் பெரிதாக புன்னகைப்பான்.

அதைச் சமீபத்தில் கூட எனது மகன் அவரது ஃப்ளாட்டுக்கு அவ்ரைப் பார்க்கச்
சென்றிருந்த போது கூடச் சொல்லிப் பூரிப்படைந்தார். அப்படி சிறுவயது முதல்
தன்னோடு பழகியவன் இப்போது மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு
படிக்கிறான் என்பதில் அளவிலா பெருமை கொண்டிருந்தவர் அவர்.

2004ம் ஆண்டு எனது “தமிழ்ப்பூங்காவில் வண்ண மலர்களின்” நூல் வெளியீட்டு
விழா லண்டனில் நடைபெற்ற போது எனது பெற்றோர் என்னுடன் இல்லையே என்ற
மனக்கவலை எனக்கிருந்தது. அந்தக் கவலையைப் போக்க வந்தவர் போல அங்கிள் எனது
தந்தை ஸ்தானத்தில் இருந்து என்னிடம் முதலாவது நூலைப்பெற்று என்னை
ஆசிர்வதித்தார்.

ஈழத்தில் கல்வி இலாகாவில் மிகப்பெரிய பதவி வகித்தவர். தமிழ்ப்பகுதிகளில்
உள்ள கல்விச்சாலைகளின் தரம் குன்றாமல் பாதுகாப்பதில் பெரும்
பங்காற்றியவர்.

ஈழத்தில் உள்ள அவலநிலை காரணமாக இடம்பெயர்ந்த பல புத்திஜீவிகளில் இவரும்
ஒருவர். இவரைத் தொடர்ந்து இவருடன் லண்டன் வந்த இவரது மனைவி லண்டனில்
உடல்நிலை காரணமாக சக்கர நாற்காலியிலேயே காலத்தை ஓட்டியவர். அவரின்
தேவைகளை ஒரு குழந்தையின் தேவைகளைப் போல் கவனித்து பாதுகாத்து வந்தார்
இந்த அங்கிள். ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் இவரது மனைவியைக் காலன்
இவரிடமிருந்து பறித்து விட்டான். ஆனால் உயிர் பிரியும் தருணத்தில் கூட
தன் மடியில் அவரை வைத்து அரவணைத்தவர் இந்த அன்புக் கணவன்.

வாழ்க்கையை மிகவும் பாசிடிவ் ஆக, நம்பிக்கையுடன் பார்த்து, அதைப்போலவே
மற்றவர்களும் பார்க்க வேண்டும் என அறிவுரை கூறிவந்தவர்.

எனது மனைவி கடந்தவாரம் பார்க்கப் போயிருந்தபோது ” எனக்கு இந்த உலகமே
வெறுத்துப் போய்விட்டது ” என்று கூறியிருந்தாராம்.

இன்று நான் பார்க்கும் போது கூட பாவம் அவரால் என்னுடன் இரண்டு மூன்று
வார்த்தைகளுக்கு மேல் பேச முடியவில்லை. ஆனால் அவர்து பார்வையில் பொங்கிய
பாசத்தின் மூலம் ஆயிரம் வார்த்தைகள் பேசிவிட்டார்.

நான் எழுத ஆர்ம்பித்ததும், ” தமிழ் ஓவியத்திற்கு ” எழுதியதே எனது முதல்
கட்டுரை ஆகும். அது இவரைப்பற்றியதேயாகும். அன்றும் இதே போல இவரை இவரது
இல்லத்தில் நான் சென்று சந்தித்தபோது அவரிடம் கானப்பட்ட ஆர்வம், சமுதாய
உணர்வு, நம்பிக்கை, தன்னம்பிக்கை இவைகள் எனது கைகளுக்கு எழுது, எழுது
என்னும் உந்து சக்தியைக் கொடுத்தது.

இன்று காலத்தின் கோலத்தால் அதே பெரியவரை வேறு கோலத்தில் பார்த்ததினால்
எனது உள்ளத்தில் எழும் சத்தமில்லாத யுத்தத்தை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன்.

கிறீஸ்துவ மததவரான இவரின் அனைவரையும் நோக்கிய அன்பு, மனிதாபிமான்ம்
ஒன்றேதா ம்னிதனின் முக்கியமான மதம் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது.

இந்த நல்லவரை குணமாக்கி, எம்மத்தியில் நடமாட விட்டு இவருடைய அன்பான
உள்ளத்தின் பாங்கு பலரையும் பற்றிக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என
எல்லோருக்கும் பொதுவான இறையை  மனமுருக வேண்டுகிறேன்.

அன்புடன்
சக்தி
______________________________________________________________________________

சத்தமுமில்லை யுத்தமுமில்லை  (9)
——————————————————————-

“எமது செயல்களே எம்மை நிர்ணயிக்கின்றன”

மேலே நான் குறிப்பிட்ட வாசகத்தை நான் படித்துவுடனேயே அது எனது மனதில்
பதிந்து கொண்டு ஒரு சத்தமில்லா யுத்தத்திற்கு வித்திட்டது.

எத்தனை உண்மையான வாக்கியம். நாம் எதை  நிர்ணயிக்கிறோமோ   அவையே எம்மை
நிர்ணயிக்கும் காரணிகளாக மாறுகின்றன.

எம்மை செதுக்கி எடுக்கும் பணியில் எமது கையில் இருக்கும் உளியாக நாம்
நிர்ணயிப்பவைகளே செயற்படுகின்றன.

ஆக மொத்தம் ஒவ்வொருவரும் தம்முடைய எதிர்காலத்தை ஆக்குவதோ சிதைப்பதோ
அவர்க்ளின் வாழ்க்கையை நோக்கிய பார்வையில் தான் இருக்கிறது.

இந்தப் பார்வையின் கோணத்தைப் பாதிப்பதற்குப் பல காரணிகள் இருக்கலாம்.
அதிலே முக்கியமாக அவர்களது இளம்பிராயத்து வளர்ப்பு முறை பெரும் பங்கு
வகிக்கிறது என்லாம்.

ஆனால் தமது செய்கைகளே தம்மை நிர்ணயிக்கின்றன என்பதை உணர முடியாமல்,
தன்னிலை புரியாமல் நடக்கும் மாந்தர்கள் பலரையே இம்மண்ணில் காணக்கூடியதாக
இருக்கிறது.

உணமை என்னும் விளக்கொளியில் உள்ளம் என்னும் திரைச்சீலையில் இருக்கும்
ஓட்டைகளைப் பார்க்கப் பயந்து, மண்னில் தலையைப் புதைத்துக் கொள்ளும்
வான்கோழி போல வாழ்ந்து கொண்டிருப்பவர்களே பெரும்பான்மையாக உள்ளது போலத்
தோன்றுகிறது.

நாமே எம்மைச் சுற்றிப் பல விலங்குகளைப் போட்டு எம்மைப் பிணைத்துக்
கொள்ளுகின்றோம், பின்பு அதிலிருந்து விடுபட முடியாதவர்களாய் சமுதாயம்,
சமயம் , சந்தர்ப்பம் என்று பல காரணிகளை  துணையாக இழுத்துக் கொள்கின்றோம்.

எனது நணப்ன் ஒருவன் திருமணமாகி பல வருடங்களின் பின்னால் தனது திருமண
வாழ்க்கையின்றும் விடுத்துக் கொண்டான். அவனது மணமுறிவுக்கான காரணங்களை
நான் ஆராய முற்படவில்லை, ஆனால் அந்த மணமுறிவில் அவனுக்கிருந்த பங்கை அவன்
உளசுத்தியுடன் ஏற்றுக் கொண்டானா ? என்பதே பெரிய கேள்வியாக என் முன்னே
தொங்கிக் கொண்டிருக்கிறது.

குழந்தை வளர்ப்பிலே எது சரி எது பிழை என்று மற்றவர்களுக்கு விளக்கம்
கொடுத்து வருபவர்களின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகளைப்
பார்க்கும் போது, அதிலே துல்லியமாகத் துலங்கும் உண்மை நெஞ்சில் ஆழமான
தடயங்களை ஏற்படுத்தி விடுகிறது.

சத்தமில்லா யுத்தமாக என்னுள்ளத்தில் எழும் ஓலங்கள் காலநீரோட்டத்தில்
காணும் உண்மைகள் எழுத்தில் பதிக்கப்படவேண்டும் என்னும் அளவிலா
ஆதங்கத்தின் வழி பிறந்ததேயாகும்.

என்னடா ! இவன் னானி போல  ஏதோ தான் உண்மைகளைப் பேசுவது போல பேசுகிறான்
என்று என்னைப் பார்த்து எண்ணாதீர்கள் .  இந்த யுத்ததின் வழி என் மனதையும்
நான் கீறிப்பார்க்கிறேன்  .  என்னையும் நான் கேள்விக்கணைகளால்
துளைக்கின்றேன்.

” எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் ? ”      எனக்
கேள்விககணை தொடுத்த கவியரசர் கண்ணதாசன் வாழ்க்கை சிறுகூடல் பட்டியில்
தொடங்கி சிக்காகோ நகரில் முடிந்தது.

இதுவே உண்மை ! இதுவே யதார்த்தம் !  !

ஒரு மனிதனுடைய கேள்வி தன்னில் ஆரம்பித்து தன்னில் முடியும் போதுதான் அது
முற்றுப்பெறுகிறது. வாழ்க்கையின் தேடல்கள் கூட அப்படித்தான்.

நாம் என்றுமே செய்யும் அனைத்துச் செயல்களிலும், நினைக்கும் அனைத்து
நினைப்புக்களிலும் தூயவர்களாஅக இருந்து விட முடியாது . அப்படிப்பட்ட மனம்
மனித மன்மாக இருக்கமாட்டாது.

ஆனால் உண்மைகளின் வழி நின்று கண்களில் தெரியும் சில தப்புக் கணக்குகளை,,
தவறான எண்ணங்களை உள சுத்தியோடு ஏற்றுக்கொண்டு அதற்கான நிவாரணத்தை தேடும்
வழியைக் கடைப்பிடிக்க முற்பட்டால் பாதி மனிதாபிமாபிக்கவர்களாகி விடுவோம்.

தவறுகளின் மீது ஏறி நின்று கொண்டு தப்புகளின் துணையோடு வாழ்க்கையின்
நிகழ்வுகளை நியாயப் படுத்த முற்பட்டால் அங்கே மனிதாபிமானம் கைகாட்டிக்
கொண்டு விடைபெற்று விடுகிறது.

எனது சொந்த வாழ்க்கையில் நானடைந்த பல கசப்பான அனுபவங்கள் நானே எனது
செயல்களால் ஏற்படுத்திக் கொண்டவையே.. அந்தக் கசப்பான் உணர்ச்சிகளை ,
அனுபவ்ங்களை எனக்கு அளிக்க காரணாமாயிருந்தவர்கள் மீது எனக்கு மனவருத்தம்
இருந்தாலும் கூட அது நிகழ்வதற்கு ஏதுவாக இருந்த எனது செய்கைகளை
கணக்கிலெடுக்காமல் கண்மூடித்தனமாக நான் நடந்த தருணங்கள் பலவுண்டு.

இந்த சத்தமில்லா யுத்தம் கூட என் மனதின் அழுக்குகளை வெளுக்கும் ஒரு
முயற்சிதான்.. உள்ளத்தில் ஓயாமல் எழும் ஓலங்களுக்கு,,  கேள்விகளுக்கு ஒரு
வடிகால் அமைத்து அதனை கருத்து என்னும் தோட்டத்தை நோக்கிப் பாய்ச்சப்
பழகிக் கொண்டால் எந்தச் சபலத்தையும் சமாளிக்கும் மனத்தைரியம் உண்டாகும்.

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் ?
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்

ஆமாம் இது கவியரசர் கண்ணதாசன் அவர்களின் அற்புதமான வரிகள். செய்யும்
செயல்களுக்கு கிடைக்கும் பலன் பல சமயங்களில் யாருடைய மனதிலும்
தென்படுவதில்லை. ஆனால் அந்தச் செயலைப் புரியும் போது பல்னை எதிர்பார்த்தா
புரிகிறோம்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, உதவியைப் பெற்றுக்கொண்டோர்
உதைக்கும் போது மனது பதைக்கத்தான் செய்யும்.

அப்போது ஏற்படும் காயத்துக்கு மருந்துதான் கவியரசரின் இந்த அற்புதமான
வரிகள். உள்ளத்தின் ஒவ்வொரு ஏக்கத்திற்கும் ,   வாழ்க்கையில் ஒவ்வொரு
நோக்கத்திற்கும் சரியான விளக்கத்தை எமக்கு நாமே வழங்கிக் கொள்லப் பழகிக்
கொள்வது அவசியம்.

அப்போதுதான் எமது அனுமதியில்லாமல் சூழ்நிலைகளால் எமது வாழ்க்கையில்
நிகழும் நிகழ்வுகளை விளங்கிக் கொள்ள முடியும்.

சத்தமிலலா யுத்ததைதை கொஞ்சம் சத்தமாகவே உங்களுடன் பகிர்ந்து கொண்டேனோ ?
காதுகளில் வலியெடுத்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்

அன்புடன்
சக்தி

______________________________________________________________________________

சத்தமுமில்லை யுத்தமுமில்லை …… 10

நிலை உயரும் போது பணிவு கொண்டால்
—————————————————————————­-
“பணிவு”  கேட்கவே இனிக்கும் மிகவும் பவித்திரமான சொல் . ஆனால் இதன்
உண்மையான அர்த்தம் என்ன ? இதற்கான விளக்கத்தைப் பலர் பலவிதமாகக்
கொண்டிருப்பது போலத் தென்படுகிறது.

மற்றவர் சொல்வதற்கெல்லாம் ஆமாப் போட்டுக் கொண்டு அமைதியாக இருப்பதுதான்
பணிவு என்பதற்கு அடையாளமா? ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்
கூறும் கருத்துடன் எமக்கு உடன்பாடு இல்லைஅயயினும் அதை ஆமோதிப்பது போல
பாசாங்கு செய்வதுதான் பணிவு என்பதா ?

அதோ அவர் ரொம்பப் பணிவான மனிதர் என்று ஒருவரையும், அவருக்கு பணிவு என்பது
எள்ளளவும் கிடையாது என்று மற்றொருவரையும் பார்த்துக் கூறும் போது அதை
எதன் அடிப்படையில் கூறுகின்றோம் ?

கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்கப்படவேண்டிய விடயம் போலத் தென்படுகிறது.
இல்லையா?

உதாரணத்துக்கு எனது தாயாரை எடுத்துக் கொள்கிறேன். என்ன இவன் தனது
சொந்தங்களின் அடிப்படையில் வைத்து விளக்குகிறானே என்று எண்ணாதீர்கள்.
எதையும் எம் வீட்டு முற்றத்தில் வைத்துப் பார்க்கும் போதுதான் அதன்
லட்சணமும், அவலட்சணமும் உண்மையாக அலசப்படுகின்றது என்றே நம்புவன் நான்.

எனது அம்மா மிகவும் மென்மையானவர். தன்னை ஏசுபவர்களிடம் கூடக் கடுமையாக
நடந்து கொள்ளத் தெரியாதவர். ஆனால் அதனால் அவர் மிகவும் பணிவுடையவர் என்று
அர்த்தம் கொள்ளலாமா ?

பொறுமையின் சிகரம் என்று வேண்டுமானல் சொல்லலாம்,ஆனால் பணிவின் அடையாளம்
அதுவா என்பது சந்தேகமே !

வாழ்க்கை முழுவது பணிவு என்பதன் அர்த்தத்தை பிழையாக விளங்கிக் கொண்டதுதன்
மூலம் தன் மீது தானே விரக்தியை ஏற்படுத்திக் கொண்டததைத் தவிர என்
அன்னைக்கு வேறு எதுவிதமான பலனும் கிடைக்கவில்லை.

தான் கொண்டிருந்த கருத்து தான் பேசிக் கொண்டிருப்பவரின் கருத்தோடு
மாறுபட்டிருப்பின் அதை அவரின் மனம் புண்படாத வகையில் எடுத்துக் கூறுவது
எவ்வகையிலும் பண்பற்ற செயலாகாது.

அது தவிர எம்மை விட வயதில் முதிர்ந்தவராக இருந்தாலும் அவர் கூறும்
கருத்துக்களுடன் நமக்கு ஏற்பு இல்லையானால் அதை மிகவும் பண்பட்ட முறையில்
அவர் மனது புண்படாத வகையில் எடுத்துச் சொல்லுவதில் தவறு ஒன்றுமே இல்லை.

பண்பு என்னும் தனிப்பட்ட பண்பட்ட சொல்லானது தவறான முறையில் விளங்கிக்
கொள்ளப்படக் கூடாது என்பதற்காகவே மேற்கண்ட விளக்கத்தைக் கூறினேன்.

ஈழத்து அரசியல் தலைவர்களைப் பற்றி உங்களில் எத்த்னை பேர்
அறிந்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களில் முக்கியமான
ஒரு பெருந்தலைவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அவர்தான்
ஈழத்துக்காந்தி என்று அழைக்கப்பட்ட தனிப்பெருந் தலைவர் திரு சா.ஜெ.வே.
செல்வநாயகம் ஆவார்.

அவரைப் பற்றிய செய்தி ஒன்று என் தந்தை சொல்ல நான் கேட்டதுண்டு. அவர்
கொழும்பிலே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தாராம், அவர் இருந்த வாடகை
வீட்டின் சொந்தக்காரர் ஒரு பெரிய கடையின் முதலாளியாம். ஒருமுறை அந்தக்
கடையில் என் தந்தை நின்றிருந்த போது அங்கே திரு செல்வநாயகம் அவர்கள்
வந்து தனது வாடகைப் பணத்தை அந்தக் கடைகாரரிடம் கொடுத்தாராம்.

பதைத்துப் போன அந்தக் கடைக்காரர் ” ஜயா நீங்கள் ஒரு சொல்லுச்
சொல்லியிருந்தால் நானே வந்து உங்களைச் சந்தித்திருப்பேனே, இதற்கெல்லாம்
நீங்கள் வரவேண்டுமா? ” என்றாரம். அதற்கு அந்தப் பெருந்தலைவரோ ” உங்கள்
வீட்டில் நான் வாடகைக்கு குடியிருப்பவன் ஆகையால் என்னால் முடியும் போது
நான் வந்து பணம் கொடுப்பதுதான் முறை ” என்றாராம்.

இவரது பண்பு எத்தனை பெரியது என்று என் தந்தை பலமுறை என்னிடம் வியந்து
பேசியதுண்டு. ஆமாம் தன்னுடைய ஆணைக்குட்பட்டு நடக்க எத்தனையோ தொண்டர்கள்,
தோழர்கள் காத்திருக்கும் போது தன்னுடைய கடமையைத் தானே செய்ய வேண்டும்
என்று எண்ணிய அந்த பெரிய மனிதனின் பண்பு நிச்சயமாக போற்றப்பட வேண்டியதே.

பண்பின் உண்மையான விளக்கத்துக்கு உகந்த உதாரணம் காட்டுவதற்காகவே மேற்கண்ட
சம்பவத்தைக் குறிப்பிட்டேன்.

1979, 80 களில் எனது உற்ற நண்பன் ஒருவனின் சகோதரியின் கணவர் இலங்கையில்
நடந்த அல்லகல்லோலத்தின் காரணமாக லண்டனுக்கு புலம் பெயர்ந்தார். அப்போது
மாணவனாக இருந்த நான் லண்டனுக்குப் புதிதாக வந்த அவருக்கு என்னால் முடிந்த
உதவிகள் சிலவற்றைச் செய்தேன். அன்று தொடங்கிய நட்பு அவர் லண்டனில்
இருந்து கனடா செல்லும் வரை  எனக்குத் திருமணமான பின்பும் நீடித்தது. அவர்
கனடா சென்ற பின்பு தொலைபேசியில் தொடர்பில் இருந்தோம்.

1997ம் ஆண்டு நான் கனடாவுக்கு குடும்பத்துடன் விடுமுறையில் சென்றிருந்த
போது என்னைத் தேடிவந்து என்னைச் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றது
தொடங்கி, ஒவ்வோரு நாளும் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டதோடு நான்
லண்டனுக்கு திரும்புவதற்கு முதல்நாள் தனது மனைவி சகிதம் வந்து எனது
மகனிடம் நான் அவருக்குச் செய்த உதவிகளைச் சொல்லியதோடு மட்டுமிலலமல் நாம்
மறுக்க, மறுக்க விடாப்படியாக எனது மகனின் கைகளில் ஒரு தங்க ப்ரேஸ்லெட்டை
மாட்டி விட்டு விட்டார்.

செய்த உதவிகளை அடுத்த நிமிடமே மறந்து விடும் நட்புகளும் உறவுகளும்
நிறைந்த இந்த காலகட்டத்தில் இருக்கிறோம்

எனது மகனுக்கு பரிசு கொடுத்தார் என்னும் காரணத்துககக இல்லை, ஆனால் எப்போ
ஒரு மனிதன் செய்த உதவியை மனதில் மறக்காமல் வைத்திருந்து அதனை அவர்களுக்கே
ஞாப்கமூட்டி தனது கடமை என்று நினைத்து சிலவற்றைச் செய்ய முற்பட்ட அந்த
உத்தம நண்பரின் பண்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

தம்மை விட வயதில் மூத்தவர்களுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ற மரியாதையைக்
கொடுப்பது, தம்மை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களின்
பேச்சில் இருக்கும் உண்மையை ஏற்றுக் கொள்ளுவது, நாம் செய்யும் தவறுகளை
ஏற்றுக் கொண்டு உரிய இடத்தில் மன்னிப்புக் கேட்பது,, எத்தனை பெரிய
இடத்தில் இருந்தாலும் தலை குனிய வேண்டிய இடத்தில் தலை குனிந்து, தட்டிக்
கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக் கொடுத்து, கைகொடுக்க வேண்டிய இடத்தில்
கை கொடுத்து நடப்பதுவே மனிதம் நிறைந்த மனதின் இன்பமான பயணமாகும்.

மனதில் சத்தமில்லாமல் எழும் யுத்தங்களின் வழி விளைந்த சில அனுபவங்களை
உங்களுடன் பகிர்ந்து கொண்டது குழுமியிருக்கும் அன்பான இளம் நெஞ்சங்களில்
புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் கொடுக்கும் என்னும் நம்பிக்கையே
எனது இத்தகைய ஆக்கங்களுக்கு உந்துகோலாக இருக்கிறது

” நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும் “

அன்புடன்
சக்தி

______________________________________________________________________________

சத்தமுமில்லை …. யுத்தமுமில்லை ……..(11)
—————————————————————————­—-

துன்பமும் மகிழ்ச்சியும் உனக்குள் இருக்கிறது உன்னைச் சுற்றியில்லை

வாழ்க்கையில் ஒரு மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள முயற்சிப்பதும்,
உண்மைகளை உள்வாங்கிக் கொள்ள நினைப்பதுவும் அவனின் வாழ்க்கையின்
நடுப்பகுதியை வந்தடையும் போதுதானோ என்றொரு சந்தேகம் உள்ளத்தை
உறுத்தத்தான் செய்கிறது.

ஆம் தேடல்களின் ஆரம்பம் ஓட்டங்களின் வேகம் குறைய குறையத்தான் வேகமாகத்
தொடங்குகிறது. வாழ்க்கையை வேதனை என்று எண்ணி முணுமுணுத்துக் கொண்டே
இருக்கும் மனிதர்களைக் காண்கிறோம், போலியான விடயங்களை மகிழ்ச்சி
என்றெண்ணி மமதையில் தம் வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்று  பிதற்றிக்
கொள்ளும் மனிதர்களைப் பார்க்கிறோம்.

போதுமென்ற மனமே பொன்செய்யும் என்னும் மனப்பக்குவம் கொண்ட உயர்ந்தவர்களைக்
காண்கிறோம். என்னிடம் இல்லாதது மற்றவரிடம் இருக்கிறதே என்னும் பொறாமை
கொண்டோர் ஒருபுறம், அட எனக்கில்லாவிட்டாலும் கூட அவன் அதை அடைந்து
விட்டானே அவனுஇக்கு வாழ்த்துக்கள் என அடுத்தவருக்காக மகிழ்வுறும்
மனிதர்களைக் காண்கிறோம்.

இவர்கள் அனைவரும் ஒரே அவனியில் ஒரே விதத்தில் வந்துதித்தவர்கள் தானே,
பின் எப்படி அவர்களுக்குள் இத்தனை வித்தியாசங்கள் வந்து புதைந்து
கொண்டன ?

” தென்னை இளநீருக்குள்ளே, தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போல்
இருப்பான் ஒருவன், அவனைத் தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் ” அருமையான
கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் உண்மையின் சூட்சுமத்தை தனக்குள்ளே
உறங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அன்பு நெஞ்சங்களே ! தயவு செய்து ஒரு நிமிடம் இறைவன் என்றிருவன்
இருக்கிறானா? இல்லையா ? என்னும் வாதத்தை ஒதுக்கி விடுங்கள். ஆத்திகம்,
நாத்திகம் என்னும் வலயத்துக்குள் இருந்து வெளியே வந்து விடுங்கள்.
ஏனென்றால் நான் மேலே குறிப்பிட்ட கூற்று ஆத்திகவாதமோ அன்றி நாத்திகவாதமோ
அன்று.

இறைவன் என்று நாமனைவரும் வணங்குவது இயற்கையை என்று வைத்துக் கொள்வோம்.
வேண்டாமே ! வணங்குவது என்னும் சொல்லைக் கூட மறந்து விட்டு இறைவன் என்னும்
சொல்லுக்குப் பதிலாக “நம்பிக்கை” என்னும் சொல்லை மாற்றி வைத்துக்
கொள்வோம்.

இங்கே கவியரசரின் அற்புதமான வரிகளை திரும்பப் பார்த்துக் கொள்வோம்.

” தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போல் இருப்பான் ஒருவன். அவனைத்
தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் “

யாரை அவர் இறைவன் என்று குறிப்பிடுகிறார்? ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போல
இருப்பவனையா? அன்றி அப்படி இருப்பவனை அறிந்து கொண்டவனையா?

இங்கேதான் என் கவியரசரின் சிந்தனைச் சிறகு விரிகிறது, அப்பழுக்கற்ற ஞானம்
உதயமாகிறது, ஆத்திகர்களை நோக்கி அவர் கூறுவது அந்த ஓட்டுக்குள்ளே
இருக்கும் தேங்காயைப் போல உனக்குள் ஒளிந்திருக்கும் உன் மனமே இறைவன்
என்கிறார்.

அதே நேரம் இறை நம்பிக்கை அற்றவர்களுக்கும் ஒரு செய்தியைக்கூறுகிறார்,
“ஓட்டுக்குள்ளே ஒளிந்திருப்பவனைக் கண்டு கொள்ளுபவர் எவரோ, அவர்களே இறைவன்
என்றும் பொருள் கொள்ளும் வண்ணம் கவியரசரது பாடல் அமைகிறது.

மற்றொருவகையில் சொல்லப்போனால் எவனொருவன் சுத்தமான மனதுடன்,
தெட்டத்தெளிவான உண்மைகளை ஏற்றுக்கொண்டு வாழும் உள்ளம் கொண்டவனோ அவன்
தன்னையே இறைவன் என்று கூடக் கொள்ளலாம் என்கிறார்.

அன்பு நெஞ்சங்களே உங்கள் துன்பமும், மகிழ்ச்சியும் உங்கள் மனதின்
பிரதிபலிப்புக்களே. இதை ஏற்றுக்கொள்லும் மனப்பக்குவம் அற்ற நாம்
பலசமயங்களில் எமது இன்ப துன்பங்களுக்கு சுற்றியிருப்போரையும், சூழலையும்
காரணம் காட்டுகின்றோம்.

இதே கவியரசர் தனது இன்னொரு பாடலில் ” மனமிருந்தால் பறைவைக்கூட்டில்
மான்கள் வாழலாம் ” என்று பாடல் வரி தந்துள்ளார்.

இது என்ன ? சாத்தியமாகக்கூடிய ஒன்றா ? மான்கள் பறவைக்கூட்டில் வாழ
முடியுமா ? என்றெல்லாம் கேள்விகள் பிறப்பது சகஜமே. ஆனால் அந்த வரியின்
அர்த்தத்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் அதனுள்ளே புதைந்திருக்கும்
ஆழ்ந்த தத்துவத்தை உணர்ந்து கொண்டால் அனைத்தும் புரிந்து விடும்.

பெரிய அந்தஸ்து கொண்ட மனிதன் கூட தனது மனதைக் கட்டுப்படுத்தக் கூடியவனாக
இருந்தால், ஒரு மண்குடிசையினுள் வாழ்ந்து விடலாம் என்பதை விளக்குவதாகவே
அவ்வரி அமைகிறது.

மீண்டும் என்ன அங்கே தெரிகிறது ? நிம்மதியின் பிறப்பிடம் நமது மனமே.
நிம்மதியை எமக்குள்ளே வைத்துக் கொண்டு அதை எங்கெங்கோ தேடியலைவது
எவ்வகையில் பலனளிக்கும்?

உள்ளத்தின் கட்டுப்பாட்டினால் மனிதனின் உணர்ச்சிகளுக்கு
கடிவாளமிடப்படுகின்றது. இதைச் சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள்
நிம்மதியைத் தேடி அலையத் தேவையில்லை.

என் மனதில் எதிர்பார்ப்புக்கள் கொடுத்த ஏக்கங்கள் நிறைந்திருந்தன அந்தத்
எதிர்பார்ப்புக்களின் தேவையற்ற தன்மை புரியத் தொடங்கியபோது ஏக்கங்களின்
எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. இதிலே முற்றும் முழுதாக வெற்ரியடைந்து
விட்டேன் என்று கூற வரவில்லை.

ஏதோ கொஞ்சம் புரிய ஆரம்பித்திருக்கிறது என்று சொல்ல வருகின்றேன்.

என்னைச்சுற்றி நடந்த நிகழ்வுகள் எனது கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்தபோது
வாழ்க்கையின் யதார்த்தம் புரிய ஆரம்பித்தது. வேதனை என்னவென்றால் அப்போது
நான் வாழ்க்கையின் மூன்றிலொரு பகுதியைக் கடந்து விட்டேன்.

எனது எழுத்துக்களின் நோக்கம் இதைப்படிக்கும் என் தம்பி தங்கைகள் தமது
வாழ்க்கையை வெற்றியாக்கிக் கொள்ள ஏதாவது ஒரு வரியாவது உதவாதா என்னும்
ஏக்கம்.

எனது வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கும் போது எனது இன்பதுன்பங்களுக்கு
நான் சுற்றியுள்ளோரையும், சூழலையும் குறைகூற செலவழித்த நேரத்தை என்
மனதைப் புடம் போட உபயோகித்திருந்தால் வாழ்க்கையில் தெளிவு எப்போதோ
ஏற்பட்டிருக்கும்.

மனதில் ஏற்படும் தெளிவின் செறிவு கூடக்கூட உண்மைகளின் வலு அதிகரிக்கும்
ஆனால் அந்த வலுவின் சுமையை உள்வாங்கிக் கொண்டு எம்முள் நாமே தேடல்களைத்
தொடங்கினால், வலுவின் சுமை வலியற்றதாகி விடும்.

கடலளவு கிடைக்கும் போதும், பின்னொரு சமயம் அது கையளவே ஆகும் போதும் சமனான
விளைவுகளை மனதினுள் கொண்டுவிட்டால் வாழ்க்கை சபலமற்றதாகி விடும்.

உண்மையன் இன்ப துன்பங்களின் ஆரம்பமும் முடிவும் எமக்குள்லேதான்
இருக்கின்றன என்னும் உண்மையை புரிந்து கொள்ல எம்மாலான முஅயர்சிகளை
மேற்கொள்ளுவோம். அதன் பயனாகக் கிடைக்கும் அனுபவங்களை மர்ரவர்களுடன்
பகிர்ந்து கொள்ளுவோம்.

மனதினுள் சத்தமில்லாமல் மற்றொரு யுத்தம் முடிந்து விட்டது அந்த
யுத்தகளத்தின் பிரதிபலிப்பு உங்கள் காதுகளில் விழுந்ததா ?

அன்புடன்
சக்தி சக்திதாசன்
______________________________________________________________________________

 

 காற்று வீசட்டும் பாய்மரத்தை மட்டும் கட்டுப்படுத்து

பாய்மரக் கப்பல் கடலிலே பயணம் போகிறது. அப்பாய்மரக்கப்பலின் பயணத்துக்கு காற்று இன்றியமையாதது. ஆனால் காற்று அடிக்கிறது பயணம் தானாக நடக்கும் என்று இருந்து விட்டால் விளைவு என்ன?

காற்றடிக்கும் திசையிலே பயணம் தொடரும் ஆனால் அது நாம் எந்த இடத்தை இலக்கு வைத்து பயணத்தைத் தொடங்குகிறோமோ அந்த இடமாக இருக்காது.

அப்படியானல் பயணம் எமது இலக்கை நோக்கி நடக்க வேண்டுமானல் அதிலே எமது பங்கு என்ன?

எமது திறமையால் பாய்மரத்தைக் கட்டுப்படுத்தி அந்தக் காற்றின் வேகத்தின் துணை கொண்டு கப்பலை எமது இலக்கை நோக்கிச் செலுத்துவதே.

பாய்மரம், கப்பல், காற்று என்ன இவன் உளறுகிறானே என்று சிந்திக்கிறீர்களா ? இல்லை எமது             வாழ்க்கைப்பயணத்தை இந்த பாய்மரக் கப்பலின் பயணத்துக்கு கொஞ்சம் சத்தமாக ஒப்பிட்டு பார்த்துக்   கொண்டேன்.

வாழ்விலே கஷ்டங்கள் ஏற்படுகின்றன. அந்த கஷ்டங்களைக் கண்டு மனம் தளர்ந்து உட்கார்ந்து விட்டால் கதி அதோ கதியாகி விடும். பலரின் வாழ்விலே அவர்களின் முன்னேற்ரத்துக்கு வழிவகுத்தது அவர்கள் அடைந்த கஷ்டங்களே.

வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு விடைதேடும் போதுதான் நமக்குப் புதுவழி பிறக்கிறது. புதிய கதவுகள் திறக்கின்றன. புதிய உணர்வுகள் ஏற்படுகின்றன. புதியதோர் அனுபவம் வாழ்க்கைப் புத்தகத்தில்  புதிய அத்தியாயமாக இணைகிறது.

பலவழிகளால் எமக்கு இடர்கள் ஏற்படுகின்றன, யாரை நாம் எமது சொந்தங்கள் என்று நம்பியிருந்தோமோ அவர்களே இடர்களைப் பிறப்பிக்கும் சம்பவங்கள் ஏற்படும். எப்படி அதை நாம் உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதிலேதான் எமது மனதின் அமைதியும், வாழ்க்கையின் பயணமும் தங்கியுள்ளது.

இவைகள் எமக்கும் மேலே உள்ள ஒரு சக்தி எமக்கு மற்றவர்களைப் பற்றிப் புரியவைக்கத் தரும் அருமையான சந்தர்ப்பங்கள் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு ஓர் காரணம் தெரிகிறது. மனதுக்கு அமைதியும் கிட்டுகிறது.

ஆமாம், வாழ்க்கையில் எமக்கு ஏற்படும் துன்பங்கள் துயர்கள், இடர்கள் காற்றைப் போன்றதே, ஜயோ      காற்றடிக்கிறதே என்று அப்படியே உட்கார்ந்து விட்டால்…….

ஆனால் அதே காற்றின் வீச்சுக்கு ஈடுகொடுத்து எமது வாழ்வென்னும் பாய்மரத்தை எமது இலக்கை நோக்கித் திருப்பிக் கொண்டால், அதே துன்பங்கள், துயரங்கள், இடர்கள் எம்மை வாழ்வில் முன்தள்ளி விடும் காரணிகளாக அமைந்து விடுகின்றன.

இடர்களையும், துயர்களையும் தாங்கிடுவது அத்தனை சுலபமா? என்று எனைப் பார்த்து பல கேள்விகள் எழலாம். இல்லை துர்களைத் தாங்குதல் அத்தனை சுலபம் அல்ல ஆனால் பக்குவப்பட்ட மனத்தினால் அவற்றை கொஞ்சம் இலகுவாக்க முடியும்.

எனது வாழ்வில் நடந்த பல செயல்கள் இதை அனுபவத்தின் மூலம் எனக்கு உணர்த்தியிருக்கின்றன. என் தந்தை உயிரோடிருக்கும் காலங்களில் எனக்கு அழகாய் அளித்த அறிவுரைகள் அப்போது புளிக்கத்தான் செய்தன. ஆனால் அனுபவங்களின் வழி அவற்றை நானே உணரும் பொழுது அவர் சொன்ன வார்த்தைகளின் அடியே கோடிட்டு நின்ற ஆழமான உண்மைகள் எனக்கு நன்றாய் உரைத்தன.

அதோ வாசல் தெரிகிறது என்று ஓடிப்போகும் போது அந்த வாசலைக் காட்டிய கதவு அடைக்கப்பட்டு விடுகிறது. ஜயோ கதவு மூடிவிட்டதே என்று கலங்கித் திரும்பும் போது சிறியதாய் ஒரு வெளிச்சம் மற்றொரு வாசலைக் காட்டுகிறது. அந்த வாசலினால் வெளியே வருபோது புதிய பல உறவுகள் எம்மை வந்தடைகின்றன.

தேங்கி நிற்கும் தண்ணீர் நதியாகிவிடாது. ஓடுக்கின்ற நீரே மக்களுக்கு நன்மை பயக்கும் நதியாகி வாழ்கிறது. தேங்கி நின்று குட்டையாகி விடக்கூடாது என்பதர்காகவே சிலநேரங்களில் சிலவழிகள் அடைக்கப்ப்டு, ஓடுவதற்கு எமக்கு நதிப்படுக்கை கிடைக்கிறது.

வரும் இடர்களைத் தடைகளைக் கண்டு தளர்ந்து விடாதீர்கள் ஏனெனில் அதுவே உங்கள் வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்த உதவும் காற்றாகிறது. உங்கள் மனமென்னும் பாய்மரத்தைக் கட்டுப்படுத்து அந்தத் தடை என்னும் கற்றைத் துணையாக்கி உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை நோக்கி பயணமாகுங்கள். அதுவே நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும்.

சத்தமில்லாமல் அந்தப் பாய்மரம் காற்றுடன் போடும் ஒரு யுத்தம் தான் அதன் பயணத்துக்கு வழிவகுக்கிறது.

அன்புடன்
சக்தி
——————————————————————–

சத்தமுமில்லை …. யுத்தமுமில்லை ……

விவேகம் வீரத்தின் சிறந்த பகுதி

வீரமா ? விவேகமா ? என்றொரு கேள்வி இதயத்தைத் துளைத்தது. சத்தமில்லாமலே தனது யுத்தத்தை ஆரம்பித்தது.

கொஞ்சம் அசை போட்டுப் பார்க்கலாம் என்றொரு எண்ணம் இந்த ஆக்கத்தைப் பூக்கப்பண்னியது.

வீரம் என்றால் என்ன?

கருத்து மோதல் என்று வந்து விட்டால், அன்றி அபிப்பிராய பேதம் வலுத்து விட்டால், மல்லுக்கட்டிக் கொண்டு யுத்தத்திற்குத் தயாராகுவதா ?

உலகத்தின் யதார்த்தம் என்ன வென்றால் எப்போதுமே தன்னை விட ஒரு மலிந்தவரைக் கண்டு விட்டால் வீரத்தின் உச்சி மோதல் என்னும் நிலைக்கு வந்து விடுவதும், அத்வே எதிர்படுபவர் ஒரு வலிந்தவராக இருந்து விட்டால் கொஞ்சம் அடக்கி வாசிப்பதும்.

இது பொதுப்படையாக அனைத்து மனிதர்களிடத்திலும் காணப்படும் குணம்.

ஆனால் எம்மில் எத்தனை பேர் கோபத்தின் உச்சியில், உணர்ச்சிக் கொந்தளிப்பின் தகிப்பில் வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய வல்லமை உடையவர்களாஅக இருக்கிறோம்? மிகவும் சொற்பமானவர்களே!

உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். வாழ்வில் பலகாலங்கள் எனது தர்க்கங்களை மிகவும் காரசாரமாக கொஞ்சம் பணிந்து போவர்களிடம் வைத்துக்கொள்லும் வழக்கம் இருந்தது.

இது நான் வேணும் என்றே தெரிந்து செய்வது அல்ல என்னையே அரியாமல் செய்து கொண்டிருந்தேன். ஆனால் தொடர்ந்து என் மனைவி இதை எனக்குச் சுட்டிக் காட்டி வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு என்னையே புரிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டியது.

எனது செய்கையை எண்ணி நானே வெட்கப்பட்டேன்.

விவாதங்கள், தர்க்கங்களில் வெற்றி தோல்வி என்பது பெரிதல்ல நாம் சொல்ல வேண்டிய கருத்துக்களை எத்துணை பணிவாக மற்றவரிடம் எடுத்துச் சொல்கிறோம் என்பதிலேயே எமது வெற்ரியும், தோல்வியும் தங்கியுள்ளது என்பது தெட்டத் தெளிவாகப் புரிந்தது.

எனது தந்தை மிகவும் இலகுவாக மற்ரவர்களிடம் பணிந்து போய்விடக்கூடியவர் என்றொரு கருத்து எமது உறவினர்கள் மத்தியில் இருந்தது. சிலர் அதை எனது தந்தையின் அவமரியாதை என்றும் கருதினார்கள்.

ஆனால் எனது தந்தையைப் பொறுத்தவரையில் அது எப்போதுமேர் அவருக்குப் பிரச்சனையாக இருந்ததில்லை.
அவரால் எப்படி இலகுவாக இதை எடுத்துக் கொள்ல முடிகிறது என்று நான் பலசம்யங்களில் வியந்ததுண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்திலே அவரது செயல்களின் வலு எனக்குப் புரிகிறது.

அவரது வீரத்தின் விளைநிலமே அவரது விவேகம்தான் என்பது நன்றாகப் புரிகிறது.

உணர்ச்சிகள் எமதுது இதயத்தைக் வழிநடத்துகின்றனவா இல்லை எமது இதயம் எமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வழிநடத்துகின்றனவா என்பதுவே முக்கியம்.

உணர்ச்சிகளின் வழி நடந்து வரும் ஆத்திரத்தை வெள்:இப்படுத்த மற்றொருவரைத் தாக்குவதுதான் வீரம் என்று கருதுவோர் பலர் இருக்கிறார்கள்.

அப்படி நடக்காமல் எல்லாவற்றிற்கும் உட்காரணத்தை ஆராய்ந்து அமைதி வழி நடப்பவரைக் கோழைகள் என்று கேலி செய்யும் நிலை பல இடங்களில் காணப்படுகிறது.

ஆனால் உண்மையான வீரத்தின் சிறந்த பகுதி விவேகமே. தனது ஆத்திர உணர்ச்சிகளை விவேகத்தினால் கட்டுப்படுத்தி நிலைமைகளை அமைதியான முறையில் கையாளக் கூடியவரே உண்மையான வீரர்களாவார்கள்.

25 வருடங்கள் சுதந்திரத்துக்காகப் போராடி எத்தனையோ உயிர்களைப் ப்லி கொடுத்த வட அயர்லாந்திலே, விடுதலைப்போராட்டத்தைக் கைவிட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு வழுவகுத்த விடுதலை இயக்கத்தின் தலைமைப்பீடமும், அவடாயர்லாந்து அரசியல் தலைவர்களும் எடுத்த முடிவில் இருந்த வீரத்தைக் கண்டு கொள்ல விவேகம் தேவை.

சாத்வீகப் போராட்டத்திலே ஈடுபட்ட மகாத்மாவைப் பார்த்துக் கேலி செய்தவர்கள் ஆயிரம். ஆனால் அத்தனை கேலிகளுக்கும் முகம் கொடுத்து தனது சாத்வீகப் போராட்ட முறையில் முனைப்புடன் ஈடுபட்ட காந்தியின் வீரத்தை உணர்ந்து கொள்ள விவேகம் தேவை.

வாழ்விலே வீரத்தின் சிறந்த பகுதி விவேகம் என்பதை அறிந்து கொள்ளும் எவருமே தன்னைத் தானே அறிந்தவர்களாவர்கள் என்பதுவும் உண்மை.

அன்புடன்
சக்தி

—————————————————————————–

 

நினைத்தது நடக்காததும் ! நடந்ததை நினைக்காததும் !

 

மனிதரின் வாழ்க்கையில் தோல்வி என்றால் என்ன என்று நினைக்கும் பொழுது அதன் அர்த்தம் பலவகப்படுகிறது. அது மனதுக்கு மனம் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது.

 

நினைத்தது நடக்காதது தோல்வி என்னும் போது, நடந்ததை நினைக்காததும் தோல்வியே என்பதைப் பலசமயங்களில் எமது மனம் ஏற்றுக்கொள்ள மறந்தோ அன்றி மறுத்தோ விடுகிறது.

 

மனதில் ஒன்றை லட்சியமாக வரித்துக் கொண்டு விடுகிறோம். அது எத்தனை தூரம் சாத்தியமாகக் கூடிய விழுக்காடு உடையது என்பதை சிந்திக்க மறந்து விடுகிறோம். அந்த இலட்சியத்தை நோக்கி எமது முழுப்பிரவாகத்தையும் திருப்பி விடுகிறோம். அப்போது எமக்கு அருகே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு எமது பிரயாசைகள் வீணாகப் போகப்போகிறது என்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது.

 

ஏனெனில் நாம் கொண்ட இலட்சியம் நிறைவேறக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகவும் சொற்பமே என்பது அவருக்குத் தெரிகிறது.

 

அனுவத்திலாழ்ந்த அவர் அறிவுரை கூறுகிறார், ஆனால் தனது இலட்சியம் என்னும் வெறியில் மூழ்கிய இவனுக்கோ அவரது அறிவுரை அவரது ஆற்றாமையின் வெளிப்பாடு என்றோ அன்றித் தான் அடையப் போகும் வெற்றியின் மீது கொண்ட பொறாமையோ என்ற எண்ணம் ஏற்படுவதால். அவரை ஒதுக்கித் தள்ளி விடுகிறான்.

 

இதுதான் பலசமயங்களில் நடக்கும் யதார்த்தமாகும். இந்த அடிப்படையிலே தம்மைச் சிதைத்துக் கொண்ட பலரை நான் சந்தித்திருக்கிறேன். எனது இளம் பிராயத்திலே அந்த இளரத்தத்தின் வேகத்திலே நான் கூட அந்தவழிப்பயணத்தில் சில காததூரம் நடந்திருக்கிறேன்.

 

ஆனால் என் மீது, நான் நம்பும் அந்த எனை மீறிய சக்திக்கு இருந்த அபிமானத்தால் எனது பாதையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி அந்தப் பயணத்தின் இலக்கை மாற்றி என்னை ஓரளவு தேற்றி விட்டது என்றே சொல்லுவேன்

 

ஆனால் அந்த மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் அது நான் மனதில் வரித்திருந்த எனது இலட்சியம் என்னும் இலக்குக்கு முரணாக அமைந்ததால் அவையனைத்துமே எனக்குத் தோல்விகள் போன்றே எனக்குக் காட்சியளித்தன.

 

வாழ்க்கையின் உண்மையின் யதார்த்த நிலைகள் புரியாத நிலையில் இருந்ததால் அந்த நிகழ்வுகளுக்குள் புதைந்திருந்த வெற்றிகளின் நிழல்கள் என்மீது படியவில்லை. என் மனத்திரையை மறைத்திருந்த இருளால், கார்மேகம் விலகச் சூரிய ஒளி மீண்டும் வரும் எனும் உண்மை உணரப்படாத நிலையில் இருந்தேன் என்றே சொல்ல வேண்டும்.

 

இதை எதற்கு நான் இங்கே குறிப்பாகச் சுட்டிக்காட்டத் தலைப்படுகிறேன் என்றால், தோல்விகள் என்று நாம் நினைப்பவை எல்லாமே தோல்விகளும் அல்ல. வெற்றிகள் என நினைத்து தேடி நாம் ஓடும் இலக்குகள் அனைத்தும் வெற்றிகளும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே.

 

பரீட்சையில் தோல்வி அடையும் போது, பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டோம் என்னும் ஆதங்கம் மனதில் தோன்றாமல் இருந்தால் அந்த மனம் மனித உணர்வுகள் அற்ற மனம்.

 

ஆனால் அதே மனம் வாழ்க்கையின் பின்னோரு காலத்தில் திரும்பிப் பார்க்கையில் பல சமயங்களில் அந்தப் பரீட்சைத் தோல்வியே , வாழ்க்கையின் தவறாக வரித்துக் கொண்ட இலட்சியப் பாதையை விடுத்து சரியான பாதைக்கு வழிமாற்றத் தேவைப்பட்ட நிகழ்வு என்பது தெரிய வரும்.

 

வாழ்க்கையில் தவறான பழக்க வழக்கங்களினால் கேளிக்கைகளில் ஈடுபட்டு தனது பரீட்சையில் தோல்வியடைபவர்களை நான் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை, ஆனால் தன்னால் இயன்ற மட்டும் முயன்று தன்னை மீறிய சுற்றுப்புற காரணிகளால் பரீட்சையில் தோல்வியுறும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

அப்படி தோல்வியடையும் போது அதற்குக் காரணம் தெரியாமல் வாழ்க்கையில் விரக்தியுற்று தம்மை வருத்திக் கொள்ளும் பலரைப் பார்க்கிறோம். அவர்களுக்கெல்லாம் மனதில் ஒரு புதுத்தெம்பு பிறக்க வேண்டும், உங்களுக்கு விளைந்த தடைக்குக் கூட ஒரு காரணம் இருக்கிறது என்று நம்புங்கள்.

 

எதைக் கைவிட்டாலும் நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள்.

 

தேடிப்போகும் காதல் பலசமயங்கள் ஓடிப்போகும், ஓடிப்போகும் போது உங்களை உண்மையான காதல் தேடி வரும்.

 

முதலாவது வகையோ அன்றி இரண்டாவது வகையோ தோல்வியாகாது. உங்களைத் தேடிவரும் வெற்றிகள் அனைத்துக்குமே பெரும்பான்மையாக நீங்கள் தகுதியானவர்களாகவே இருப்பீர்கள்.

 

அப்போது எனக்கு 16 வயது இருக்கும். குடும்பத்திலே கடைசிப் பிள்ளை. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். கேட்டதெல்லாம் கிடைக்கும் ஒரு நிலையிருந்தது, நண்பர்களுடன் வாழ்க்கையின் வசந்தங்களை மட்டும் வாழ்ந்து பார்க்கும் வயது.

 

ஒருநாள் எதிர்காலப் பலன்கள் சொல்லும் ஒருவரை ஆலய மண்டபத்தில் நானும் எனது நண்பனும் சந்தித்தோம். எனது நண்பன் அத்தருணத்தில் வெளிநாடு செல்வதிலேயே குறியாக இருந்தான், நானோ அதற்கு எதிர்மாறாக இருந்தேன்.

 

எனது ஜாதகப்படி நான் வெகு சீக்கிரம் வெளிநாடு போவேன் என்றும், எனக்கு அமையப்போகும் வாழ்க்கைதுணை வடக்கேயிருந்து வரும் என்றும் சொன்னார் அந்தப் பெரியவர்.

 

நான் இருந்ததோ யாழ்ப்பாணம் எமக்கு வடதிசையில் இருப்பது தமிழகம்.

 

வெளிநாடு செல்லப்பிரியப்படாதவன், உள்நாட்டிலே எனது வயதொத்த ஒரு ஒரு நங்கையை மனதினுள் ரகசியமாக விரும்பியவன் என்னைப் போய் ….. அவரைப்பார்த்து நானும் எனது நண்பனும் எள்ளிநகையாடினோம்.

 

ஆனால் நடந்தது என்ன ?

 

அடுத்த வருடமே நான் லண்டன் பயணமானேன், லண்டனில் ஒரு தமிழக நங்கையை சந்தித்து என் வாழ்க்கைத்துணையாக்கிக் கொண்டேன்.

 

அதற்காக நான் ஜாதகம், கைரேகை என்பதெல்லாம் சரி என்று வாதிடுவதற்காக இதைக் கூறவில்லை, ஒரு காலகட்டத்தில் நம்பமுடியாமல் இருந்தது, அதுவே தோல்வி என நினைத்தது மற்றொரு காலத்தில் வேறுவிதமாக, யதார்த்தமாக, தோல்வியில் வெற்றியாக அமைந்து விடுவதைச் சுட்டிக் காட்டுவதே என் நோக்கம்.

 

தோல்வி என்பது நாம் நினைத்தது நடக்காமல் போவது அல்ல. நடந்ததை நாம் நினைத்து அதனால் அடைந்த அனுபவத்தை சரியாக உள்வாங்கிக் கொள்ளாததுவே உண்மையான தோல்வியாகும்.

 

இதைப்படிக்கும் இளநெஞ்சங்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் தோற்று விட்டோம் என்று ஒரு போதுமே விரக்தி அடைந்து விடாதீர்கள். அந்தத் தோல்வியால் கிடைத்த அனுபவத்தை வைத்து மற்றொரு பாதையில் நீங்கள் நிச்சயம் வெற்றி அடைவீர்கள்.

 

அப்படி வெல்லும் போது முதலில் நீங்கள் தோல்வி என்னும் நிகழ்வு கொடுத்த அனுபவத்தை மட்டும் மறந்து விடாதீர்கள், ஏனேனில் அதை மறப்பதுதான் உண்மையான தோல்வி என்பது எனது தாழ்மையான் அபிப்பிராயம்.

 

அன்புடன்

சக்தி

07.12.2008

மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்: